கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகிலஇந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் களமருதூர். பெரியார் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிசெய்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் பயனாளிகளுக்கு மத்திய அரசு 256 ரூபாய் கூலி வழங்குமாறு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் எங்கள் களமருதூர் ஊராட்சியில் அதனைச் சார்ந்த பெரியார் நகர் பகுதியில் 100 நாள் வேலை செய்யும் எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் 130 ரூபாய் மட்டுமே கூலியாக வழங்குகிறது.
அரசின் சட்டத்திற்கு விரோதமாகக் கூலியைக் குறைத்துத் தருவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் உரிய பதில் இல்லை. எனவே ஒன்றிய அலுவலகம் முன்பு எங்களுக்கு வழங்க வேண்டிய 256 ரூபாய் தினசரி கூலியை வழங்க வேண்டும். அதை விடுத்து 130 ரூபாய் எங்களுக்குப் பிச்சையாக வழங்கக்கூடாது என்று கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துகிறோம்.
100 நாள் வேலைக்குச் சென்று வேலை செய்யும் ஒரு நபருக்கு தினசரி 256 ரூபாய் கூலி வழங்க வேண்டும். ஆனால் எங்கள் ஊராட்சியில் 130 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது எங்களுக்கு சேர வேண்டிய மீதி 126 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பங்கிட்டுக் கொள்கிறார்களா? இதில் முறைகேடு நடப்பதாகக் கருதுகிறோம். உயரதிகாரிகள் இந்தத் திட்டப்பணிகளைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 100 நாள் வேலை செய்யும் கூலிப் பணியாளர்களுக்கு 256 ரூபாய் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு மத்திய அரசு அறிவித்த 256 ரூபாய் கூலி வழங்கும் வரை எங்கள் போராட்டம் அவ்வப்போது தொடரும் என்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர், களமருதூர் கிராம மக்கள், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் ஜெய்சங்கர் ஒன்றியச் செயலாளர் ஆனந்தராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இவர்களது கோரிக்கையை அரசுஅதிகாரிகள் கண்டு கொள்வார்களா?