சேலம் மாவட்டம் ஆவரங்கம்பாளையம் பகுதியில் கடந்த மாதம்(செப்டம்பர்)30 ஆம் தேதி சூட்கேஸ் ஒன்றில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் நிர்வாண நிலையில் கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆவரங்கம்பாளையம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
ஆய்வில் சந்தேகப்படும்படியான கர்நாடகா பதிவெண் கொண்ட கார் ஒன்று சர்வீஸ் சாலையில் வந்து சென்றுள்ளதைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து கார் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் காரின் உரிமையாளர் ஒடிசாவைச் சேர்ந்த, அபினாசாகு(41) என்பது தெரியவந்தது. பின்பு அவரின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக ஒடிசா விரைந்த சங்ககிரி போலீசார், ஜார்ஜ்பூர் பகுதியில் பதுங்கிருந்த அபினாசாகுவை பிடித்து விசாரித்தனர். அதில், ஒடிசாவைச் சேர்ந்த அபினாசாகு மற்றும் அவரது மனைவி அஸ்வின் பாட்டீல் இருவரும் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளனர். இந்த தமபதியின்ருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவர் மனைவி இருவரும் பணியாற்றுவதால், வீட்டு வேலைக்கு வேண்டி, ஓடிசாவில் ஒரு ஆசிரமத்தில் வேலைப்பார்த்த 15 சிறுமி ஒருவரை அபினாசாகுவின் தந்தை அனுப்பி வைத்தார். அந்த சிறுமியும் பெங்களூருவில் உள்ள அபினாசாகுவின் வீட்டில் வேலை செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அபினாசாகுவின் 6 வயது மகன் மீது 15 சிறுமி தண்ணீரை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபினாசாகுவும், அஸ்வின் பாட்டீலும் சிறுமி என்று கூட பாராமல் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில் சிறுமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவத்தை மறைக்கச் சிறுமியின் உடலில் உள்ள ஆடைகளை கழற்றிவிட்டு புதிய சூட்கேஸ் ஒன்று வாங்கி அதனுள் வைத்து சேலம் அருகே வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் சங்ககிரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.