Skip to main content

‘பாம்பு தான் அரசியல்’- விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

Published on 27/10/2024 | Edited on 27/10/2024
 short story where Vijay said that snake is politics

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாடு மேடைக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய், தொண்டர்களை நோக்கி நடந்து  தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த விஜய், 100 அடி கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை வழியில் த.வெ.க. செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் பேசும் போது, “ஒரு குழந்தை முதன் முதலில் அம்மா என்று சொல்லும் போது அந்த அம்மாவிற்கு ஒரு சிலிர்ப்பு வரும். அந்த சிலிர்ப்பு எப்படி இருந்தது என்று அம்மாவிடம் கேட்டால், அவர்களால் தெளிவாக விளக்கிச் சொல்ல முடியும். ஆனால் அந்த உணர்வு எப்படி இருந்தது என்று குழந்தையை கேட்டால், அந்த குழந்தை எப்படிச் சொல்லும். குழந்தைகள் கிட்ட எதைக் கேட்டாலும், பால் வாசம் மாறாத வெள்ளந்தியாக சிரிக்க மட்டுமே தெரியும். அது உணர்ந்த அந்த சிலிர்ப்பை, வார்த்தையால் சொல்ல குழந்தைக்குத் தெரியாது.  அப்படி ஒரு உணர்வோடுதான் தற்போது உங்கள் முன் நிற்கிறேன்.

ஆனால் அதேநேரத்தில், அம்மா கிட்டகூட அந்த உணர்வ சொல்ல முடியாமல் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை முன்னாடி ஒரு பாம்பு படமெடுத்து நிற்கிறது என்றால் என்ன நடக்கும்? யார் முன்னாடி வந்து பாம்பு நின்றாலும் பயந்து ஓடுவார்கள், பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று ஒரு பழமொழியே இருக்கிறது. ஆனால் அந்த குழந்தை என்ன செய்யும் தெரியுமா? அவங்க அம்மாவை பார்த்து சிரித்த அதே சிரிப்போடு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அந்த பாம்பை பார்த்து சிரித்துக்கொண்டே கையில் பிடித்து விளையாட ஆரம்பிக்கும். அப்போ அந்த குழந்தைக்கு பாம்ப கண்டால் பயம் இல்லையா? என்று கேள்வி வரும். பாச உணர்வே என்னவென்று சொல்லத்தெரியாத அந்த குழந்தைக்கு பயம் என்றால் மட்டும் சொல்லத் தெரியுமா என்ன? இங்கே அந்த பாம்புதான் அரசியல்; அதைக் கையில் பிடித்து விளையாட ஆரம்பிக்கிறதுதான் உங்கள் விஜய்.

அரசியலுக்கு நாம் குழந்தைதான்; இது அடுத்தவர்களின் கமெண்ட். ஆனால் பாம்பா இருந்தாலும் பயமில்லை என்கிறது தான் நம்முடைய கான்ஃபிடன்ட். அரசியல் ஒன்றும் சினி ஃப்ல்ட் இல்லையே பேட்டில் ஃபில்ட்டாச்சே... கொஞ்சம் சீரியஸாகத்தான இருக்கும். அதனால பாம்பா இருந்தாலும், பாலிடிக்ஸா இருந்தாலும் கையில் எடுக்கனும்னு முடிவு பண்ணிட்டா... சீரியஸ்னஸ்ஸோட கொஞ்சம் சிரிப்பையும் கலந்து செயல்படுவதுதான் நம்முடைய செயல்... நம்முடைய ரூட்டு.. அப்படி செயல்பட்டாதான் இந்த அரசியலில் எதிரில் நிற்பவர்களை சமாளிக்க முடியும். இந்த தாறுமாறா ஆடுற ஆட்டம் இதுல்ல, தத்துவத்தோடுதான் ஆட வேண்டிய ஆட்டம்னு சும்மா அப்படி இப்படின்னு பேருக்குச் சொல்லி கூச்சலும் போட முடியாது இல்லையா? கவனமாத்தான் உரையாட வேண்டும்....” என்றார். 

சார்ந்த செய்திகள்