சேலம் மாவட்டம் வீரப்பம்பாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “20 ஆண்டு காலம் மு.க.ஸ்டாலின் அந்த கட்சிக்காக உழைத்தார். அவரது உழைப்பை நாங்கள் மறுக்கவில்லை. அவர், எம்.எல்.ஏ, மேயல், எதிர்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளில் வகித்த பிறகு தான் முதல்வர் ஆனார். ஆனால், கட்சிக்காக எந்தவிதமான பாடுபடாமல், திமுக என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டும், கலைஞரின் குடும்பம் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு, இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடத்தியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே, இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல், தமிழகத்தில் மன்னர் ஆட்சி என்பது ஒருபோதும் எடுபடாது. அதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். அதோடு தி.மு.க குடும்ப கட்சியாக மாறிவிட்டது. வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றிப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும். தன்னுடைய மகனை, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வைத்து மக்களிடத்திலே ஈர்ப்பு சக்தியை உண்டாக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சி செய்கிறீர்கள். ஒரு முயற்சியும் எடுபடாது. மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள், அவர்கள் ஒருபோதும் ஏமாற்ற முடியாது” என்று பேசினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவை பற்றி தமிழக வெற்றிக் கழகம் பேசாமல் இருப்பதால் மற்றவர்கள் ஏன் துடிக்கிறார்கள் என தெரியவில்லை. அ.தி.மு.க கட்சி என்பது மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி. அதிமுக ஆட்சியின் போது தான் நிறைய திட்டங்களை கொண்டு வந்தோம். அப்படிப்பட்ட கட்சியை அவர் எப்படி விமர்சிப்பார்?. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். அந்த அடிப்படையில் தான் அவர்கள் பேசுவார்கள். அதனால், இது குறித்து மற்றவர்கள் ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.