காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜமுனா. இவர், தனது மகள் கௌசல்யா அவரது பேத்தி மூவரும் காதணி விழாவிற்காக தனியார் எம்.பி.டி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அதில் ஜமுனா தனது கை பையில் 5 சவரன் நெக்லஸ் எடுத்து வந்துள்ளார். அப்பொழுது திடீரென்று ஜமுனாவின் பேத்தி அழுது கொண்டிருப்பதை கவனித்த அவர் கைப்பையை தனது மடியில் வைத்து விட்டு குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்து அவரது அழுகையை நிறுத்தியுள்ளார். பிறகு அவரது சீட்டுக்கு எதிரே ஒரு பெண்மணி அமர்ந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த பெண்மணி, ஜமுனா அருகே வந்து அமர்ந்து வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் இறங்கியுள்ளார். இதையடுத்து ஜமுனா, ஆற்காடு பாலாஜி நகரில் உள்ள அவரது தங்கை வீட்டில் சென்று கைப்பையை பார்க்கும் போது, 5 சவரன் நெக்லஸ் நகை இல்லாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் அவரை அமர வைத்து, இந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கக்கூடாது நீங்கள் உடனடியாக வாலாஜா காவல் நிலையத்தை அணுகவும் என்று போலீசார் அலட்சியமாக பதில் அளித்தாகக் கூறப்படுகிறது. பின்னர் ஜமுனா, வேறு வழியில்லாமல் வாலாஜா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். வாலாஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற ஜமுனாவை, நீங்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்தை அணுக வேண்டும் என்று திரும்பவும் அங்கேயே போலீசார் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, மீண்டும் ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு வந்துள்ள ஜமுனாவை, சுமார் மூன்று மணி நேரம் அமர வைத்து, ‘நீங்கள் இதனை ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் அணுகவும்’ என்று திரும்பவும் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
இதில் பொறுமையிழந்த போன ஜமுனா, உடனடியாக ஆன்லைன் மூலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதியின் தொலைபேசி எண்ணை எடுத்து அவரை அணுகியுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, ‘நீங்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் அவர்கள் உங்கள் புகாரை பதிவு செய்து நகையை கண்டுபிடித்து தருவார்கள்’ என்று பதில் அளித்தார். இதையடுத்து மீண்டும் ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தபோது புகாரை எடுத்துக்கொண்டு சி.எஸ்.ஆர் காப்பியை அளித்துள்ளனர்.
காலை 11 மணியளவில் தொலைந்து போன நகைக்கு, புகாரை எடுத்துக்கொள்வதற்கு சுமார் 6 மணி நேரம் அலைக்கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜமுனா, ‘எனது நகையை இந்தக் காவல்துறையினர் கண்டுபிடித்து தரவில்லை என்றால் நான் ஏதாவது செய்துகொண்டு எனது உயிரை விட்டு விடுவேன்’ என்று புகார் அளித்துள்ளார்.