Skip to main content

'மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்'-26 தீர்மானங்களை நிறைவேற்றிய தவெக

Published on 03/11/2024 | Edited on 03/11/2024

 

தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை அடுத்த பனையூரில் தனது கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமாக 138 நிர்வாகிகள் பங்கேற்றனர். நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டை மிகப்பெரிய அளவில் வெற்றி மாநாடாக நடத்தி காட்டிய நிர்வாகிகளுக்கும் அதற்காக அமைக்கப்பட்ட குழுவினர்களுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்ததோடு மேலும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை கண்ணியத்தோடு கையாண்டு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். தரைக்குறைவாக விமர்சிக்கக் கூடாது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான விமர்சனங்களை வைக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாக்குச்சாவடிக்கு 10 பேர் வீதம் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்; புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்' என பல அறிவுறுத்தல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆலோசனை கூட்டத்தை செயற்குழு கூட்டமாக பாவித்து 26 தீர்மானங்களை தவெக நிறைவேற்றி உள்ளது. வக்ஃபு சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்; தமிழ் மொழியில் தலையிட ஒன்றிய  அரசு, ஒன்றிய அரசின் பிரதிநிதிகளுக்கு உரிமை இல்லை; உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்; ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கைக்கு கண்டனம்; பாலியல் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க சட்டத்திருத்தம் தேவை; மாதம் ஒரு முறை மின் கணக்கெடுப்பு என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு செயல்படுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வி மாநில அரசு பட்டியலில் வழங்க வேண்டும்; கால நிர்ணயம் செய்து மதுக்கடைகளை மூட வேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் ஒன்றிய அரசைக் காரணம் காட்டும் தமிழக அரசுக்கு கண்டனம்; பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திரும்ப பெற வேண்டும்' என மொத்தம்  26 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது தவெக.

சார்ந்த செய்திகள்