நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.