Skip to main content

“பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தரை ஆளுநர் சந்தித்ததன் அர்த்தம் என்ன?” - கி. வீரமணி கேள்வி

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
K. Veeramani questioned What does it mean when the Governor meets the Vice-Chancellor of Periyar University?

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதே சமயம் துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் ஆர்.என். ரவியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டிருந்த சமயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு நேற்று (11-01-24) வருகை தந்தார். அங்கு முறைகேடு புகாரில் கைதாகி ஜாமீனில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். பின்னர் துணைவேந்தர் ஜெகநாதன் ஆளுநர் ஆர்.என். ரவியை பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தரை, ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாவட்டத்திற்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கோவிலை நம்பி வாக்குகளை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் மோடி நம்பிக் கொண்டிருக்கிறார். அதை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்க இந்தியா கூட்டணி தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல எந்த நாட்டிலும் கோவிலுக்காக பிரதமர் அடிக்கல் நாட்டி, அதனைத் திறந்து யாரும் பார்த்தது இல்லை. இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும். இந்த அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படுமே தவிர வேறு இல்லை.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி சென்ற விவகாரத்தில் ஆளுநர் எப்படி நடந்து கொள்கிறார் என மக்கள் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு. அரசியல் அமைப்பு சட்டம் 162இன் படி ஆளுநர் மாநில அரசின் ஒரு பகுதி மட்டுமே. ஒருவர் மீது அரசு வழக்கு போட்டுள்ளபோது ஆளுநர், அந்த நபர் அருகில் கூட செல்லக்கூடாது. முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ள துணை வேந்தரை, ஆளுநர் சந்தித்து விசாரிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் மாற்றவும், அதை மறைப்பதற்காகவும் தான் சென்றாரா? இதை அதிகாரிகள் பார்க்கும்போது, ஆளுநரே துணை வேந்தருடன் இருக்கிறார் என்று அச்சப்படுவார்கள். இந்த விவகாரத்திலும் ஆளுநர் ஆர்.என். ரவி தனது அரசியலை நடைமுறைப்படுத்துகிறார். இதனால்தான், மாணவர்கள் ஆளுநரை எதிர்த்து கண்டனங்களை வெளிப்படுத்தினர்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்