Skip to main content

தப்பி ஓடிய கைதியை பிடிக்க கைகொடுக்காத ட்ரோன் கேமரா... மருத்துவக்கல்லூரியில்  போலீசார் குவிப்பு 

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
incident in pudukottai

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் தாலுகா, ஏம்பல் கிராமத்தில் கடந்த 16 நாட்களுக்கு முன்பு 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கண்மாய் கரையோர புதரில் வீசப்பட்டிருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற அப்போதைய எஸ்பி அருண்சக்தி குமார் கொலையாளியை பிடிக்க உத்தரவிட்ட நிலையில் சில மணி நேரங்களில் அதே பகுதியைச் சேர்ந்த சாமிவேல் என்ககிற ராஜா (27) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான்.

 

சிறுமியை கொன்ற கொலையாளிக்கு விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்களும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் கோரிக்கை வைத்தனர்.

 

தொடர்ந்து தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதையடுத்து போக்சோ தலைவரை, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். இந்த நிலையில்தான் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜாவுக்கு புதன் கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 2 போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

 

incident in pudukottai


முதல்கட்ட சோதனை முடிந்த நிலையில் வியாழக்கிழமை காலையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் அங்கேயே தங்க வைத்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர். ஆனால் இன்று காலை போலீசாரிடம் இருந்து கைதி ராஜா  தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியானது. தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் 6 தனிப்படைகள் அமைத்து அருகில் உள்ள கரையப்பட்டி, தென்னதிராயன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக ஒருவன் ஓடியதாக ஒரு மூதாட்டி சொன்னதாக தொடர்ந்து காட்டுப் பகுதியை ஆய்வு செய்ய ட்ரோன் கேமரா பயன்படுத்தி தேடியும் பயனில்லை. எஸ்.பி. ஒரு மோட்டார் சைக்கிளில் தேடும் பணியில் ஈடுபட்டார். மாலை வரை நூற்றுக்கணக்கான போலீசார் தேடியும் ராஜாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கைதியை தப்பவிட்ட 2 போலீசாரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

incident in pudukottai

 

இந்த நிலையில் தப்பி ஓடிய கைதி  ராஜா மருத்துவக்கல்லூரி வளாகத்தில்தான் தங்கி இருந்ததாகவும், அவனைப் பார்த்ததாகவும் தகவல் சொன்ன நிலையில் காட்டுப் பகுதியில் தேடிய போலீசார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவக்கல்லூரியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்வதால் விரைவில் பிடித்துவிடலாம் என்று போலீசார் அதற்கான பணியிலும் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவிற்குள் கைதி ராஜா பிடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தப்பியோடிய கைதி ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்