விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாத்தூர் அருகே உள்ளது பொம்மையாபுரம் பகுதியில் சாய்நாத் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பாலாஜி என்பவருக்குச் சொந்தமான, நாக்பூர் உரிமம் பெற்ற இந்தப் பட்டாசு ஆலையில் 80க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகளைத் தயாரிப்பது வழக்கம். இந்த ஆலையை சிவகாசியைச் சேர்ந்த வனிதா பட்டாசு ஆலையின் உரிமையாளருக்கு விற்றுவிட்டனர். ஆனால், பட்டாசு உற்பத்தி செய்வதற்கான உரிமமோ, பெயர் மாற்றமோ செய்யப்படவில்லை.
இந்த நிலையில், இன்று (4-1-2024) சனிக்கிழமை காலை சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல வேலைக்கு வந்தனர். அப்போது, பட்டாசுக்கான வேதிப் பொருட்கள் தயாரிக்கும் அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அதனால், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வெடிச்சத்தம் கேட்டவுடன் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்தபடி ஆலையை விட்டு வெளியே ஓடினார்கள். தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் ஆலையின் மற்ற அறைகளுக்குத் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை சக தொழிலாளர்களின் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வெடி விபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் சிவகுமார் (56), குருந்தமடத்தைச் சேர்ந்த கோபால் மகன் வேல்முருகன் (54), அதே பகுதியைச் சேர்ந்த சுப்பு என்பவரது மகன் காமராஜ் (54), பொம்மையாபுரத்தைச் சேர்ந்த இராமசாமி மகன் கண்ணன் (54), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் மகன் மீனாட்சிசுந்தரம் (46), செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த இராஜாமணி மகன் நாகராஜ் (37) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன்(21) என்பவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட காவல்துறையினர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவ்விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான, வெடி விபத்து நடந்த பொம்மையாபுரம் பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், “விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையான பயிற்சி பெற்றவர்களை மட்டுமே பட்டாசு ஆலையில் வேலைக்குப் பயன்படுத்த வேண்டும். பயிற்சி இல்லாதவர்களை வேலைக்குப் பயன்படுத்தியதாக தகவல்கள் வருகிறது. இது குறித்து உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.