பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு-பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 பேர் பலியானதைத் தொடர்ந்து, சிஐடியு -பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சி.பாண்டியன் பேசியபோது “விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் 16 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, இன்றுவரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற வெடிவிபத்துகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலைகள் தொடர் கண்காணிப்பில் இருக்கவேண்டும். இன்று (4-1-2024) சனிக்கிழமை வெடிவிபத்து நடந்த சாய்நாத் பட்டாசு ஆலையை, வனிதா என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.
அதன் உரிமம் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனாலும், தொடர்ச்சியாக பட்டாசு ஆலையில் உற்பத்தி நடைபெற்றுள்ளது. அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் ஆலை இயங்குவதற்கு வாய்ப்பில்லை. விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்துகளுக்கு விதிமீறல்களே காரணமாக உள்ளன. எனவே, பட்டாசு ஆலைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அரசு நிர்வாகமோ, கண்காணிப்புக் குழு என்ற பெயரில் லஞ்ச வேட்டையில் இறங்கியிருக்கிறது.
இந்த ஆண்டின் துவக்கத்திலேயே, அதுவும் ஜனவரி மாதமே இந்த வெடி விபத்து நடந்திருப்பது மிகவும் சோகமான நிகழ்வாகும். 6 தொழிலாளர்கள் உடல் கருகிஇறந்துள்ளனர். இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் தடுத்திட தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி அரசு நிர்வாகம் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” என்றார்.