Skip to main content

அண்ணன் குருவின் எதிர்பாராத மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை: அன்புமணி உருக்கம்

Published on 26/05/2018 | Edited on 26/05/2018
guru

 

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணன் மாவீரன் குரு அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். அவரது மறைவை நேரில் கண்டும், மாவீரன் மறைந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது மறைவு என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் மீது அளவில்லா அன்பு காட்டி, அக்கறை செலுத்தியவர்களில் மாவீரன் குரு அவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். எனது நலனில் அவர் காட்டிய அக்கறை அளவில்லாதது. என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களில் அவர் முக்கியமானவர். சுமார் 25 ஆண்டுகளாக என்னை மூத்த அண்ணனாக இருந்து வழி நடத்தினார். நானும் அவர் மீது மரியாதை கொண்டிருந்தேன்.

மாவீரன் குருவுக்கு இரண்டாவது முறையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை பெரும்பாலான நேரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல்நிலையை கவனித்து வந்தேன். உலகின் புகழ்பெற்ற நுரையீரல் மருத்துவ வல்லுனர்களை தொடர்பு கொண்டு அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகளை பெற்றேன். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர், நுரையீரல் மருத்துவ வல்லுனர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றேன்.

மாவீரன் குரு அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு தீவிர மருத்துவம் அளித்து காப்பாற்ற மருத்துவர்கள் போராடினார்கள். அப்போது நானும் உடனிருந்தேன். ஆனால், சுமார் 45 நிமிடங்கள் கடுமையாக போராடியும் பலனின்றி அண்ணன் மாவீரன் குரு அவர்கள் மரணமடைந்தார். எனது குடும்ப உறுப்பினர்களில் முக்கியமான எனது மூத்த சகோதரனை இழந்து துடித்துக் கொண்டிருக்கிறேன்.

அண்ணனை இழந்து நான் படும் வேதனைகள் அளவற்றவை. மாவீரன் குரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை அவருடன் இருந்து சிகிச்சைகளை கவனித்துக் கொண்டவன் என்ற முறையில் அவர் உடல் நலம் பெற்று இல்லம் திரும்புவார் என்று உறுதியாக நான் நம்பினேன். ஆனால், எதிர்பாராத அவரது இந்த மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மாவீரன் குருவின் மறைவுச் செய்தியை பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொண்டர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். எனது அதிர்ச்சி, வேதனை, சோகம் ஆகியவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மாவீரன் குரு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பா.ம.க, வன்னியர் சங்க உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்