
தமிழ்நாடு முழுவதும் மின் பற்றாக்குறையை போக்க ஆங்காங்கே தனியார் நிறுவனங்கள் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்து அதனை தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் தகடுகள் பல ஏக்கர் பரப்பளவுகளில் பரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதேசமயம் துணைமின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்ல ஏற்படுத்தப்படும் மின் பாதைகளுக்கு விதிமுறைகளை பின்பற்றப்படுவதில்லை. இதனால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
இந்த நிலையில் இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பிசானத்தூரில் இருந்து புதுப்பட்டி துணைமின் நிலையத்திற்கு சூரியஒளி மின்சாரம் கொண்டு செல்லும் மின் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மட்டங்கால் கிராமத்தின் வழியாகச் செல்லும் மின் பாதை "மட்டங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி" வளாகத்தை ஒட்டி சுற்றுச்சுவருக்கு மேலே நுழைவாயில் வழியாக செல்கிறது. உயரழுத்த மின்சாரம் செல்லும் மின் பாதையால் பள்ளிக் குழந்தைகளுக்கு இடையூறு, ஆபத்துகள் ஏற்பட்டுவிடாமல் மின் பாதையை மாற்றி அமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து மட்டங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர், வட்டாரக் கல்வி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எங்கள் பள்ளி சுற்றுச்சுவரின் மேலே மற்றும் பள்ளியின் மிக அருகில் சூரியஒளி மின் பாதை அமைத்துள்ளனர். இதே போல ஏற்கனவே இரு மின் பாதைகள் செல்கிறது. இப்போது மூன்றாவதாக உயரழுத்த மின்கம்பிகள் செல்வதால் எங்கள் பள்ளி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அச்சமாக உள்ளது. ஆகவே பள்ளி அருகில் செல்லும் இந்த மின் பாதையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்து எங்கள் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சூரிய ஒளி மின் பாதைகள் செல்ல அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி வளாகம் வழியாக மின் பாதை செல்வதை மாற்றி அமைப்பதுடன் உரிய வழிகாட்டுதல்கள் படி மின் பாதை செல்கிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் எதிர்காலங்களில் ஏற்படும் மின் விபத்து, ஆபத்துகளை தடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.