Skip to main content

"என் கணவர் ஒரு பெரிய எழுத்தாளராக இருக்கலாம், ஆனால்..." - திருமதி சுஜாதா பகிர்ந்த நினைவுகள்  

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

உயிர்மை பதிப்பகம் சமீபத்தில் நடத்திய 'சுஜாதா விருதுகள்' விழாவில் மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜன் (இவரது பெயர்தான் ரங்கராஜனின் புனைப்பெயர்) பேசினார். அப்போது அவர் எழுத்தாளர் சுஜாதாவுடனான தனது வாழ்க்கையின் சில நினைவுகளை மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சின் ஒரு பகுதி...

 

sujatha



"இந்த விழாவை திரு.ஹமீது அவர்கள் (மனுஷ்யபுத்திரன்) கடந்த பத்து ஆண்டுகளாக மிக சிறப்பாக நடத்தி வருகிறார். அதற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் கணவர் ஒரு பெரிய எழுத்தாளராக இருக்கலாம், ஆனால், வசந்தபாலன் சொன்னது போல அவர் வாழ்க்கை பூரா 'detached' ஆகத்தான் இருந்தார், எல்லா விஷயங்களிலும். ஒரு சமயம் விநாயகர் சதுர்த்தியின்போது முன்னாடியே பலகாரமெல்லாம் செய்து வைத்துவிட்டு கற்பூர ஆரத்தி மட்டும் காட்டிவிட்டு சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டு ஊருக்குப் போனேன். ரெண்டு நாள் கழித்து வந்து பார்த்தால் கற்பூரமெல்லாம் அப்படியே இருந்தது. "என்ன, சுவாமிக்கு ஆரத்தி காட்டலையா?"னு கேட்டேன். "நீ ஒன்னும் பயப்படாத பிள்ளையார் ஒன்னும் கோச்சுக்கமாட்டார்"னு சொல்லிட்டார்.

அவருக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. காலையில் அலுவலகம் போவார்,   வருவார், வாக்கிங் போவார், ஆறு ஏழு புத்தகங்களை மாற்றி மாற்றிப் படிப்பார். நான் அவருடன் எந்த வாக்குவாதமும் செய்ததில்லை. வாக்குவாதத்தால் எந்த பயனுமில்லை என்று முன்பே சொல்லிவிட்டார். நானும் 'இவர் கூடத்தான் காலம் முழுதும் பயணிக்கப் போறோம். எதுக்கு தேவையில்லாமல் சண்டை போட்டுக்கிட்டு' என்று விட்டுவிட்டேன்.

அவர் கதைகளில் பெண்களைப் பற்றி ரொம்ப நல்லா எழுதுவார், புடவை பற்றி அது இதுன்னு வர்ணனையெல்லாம் நல்லா இருக்கும். ஆனா, நிஜத்தில் அவருக்கு ஒரு புடவை கூட வாங்கத் தெரியாது. ஒரு முறை டெல்லி போனார். 'குளிருக்கு ஒரு ஸ்வெட்டர் வாங்கிட்டு வரச் சொன்னேன். அவரும் வாங்கிட்டு வந்தார், கலர் எல்லாம் போன மாதிரி ஒன்னை. எனக்கு அது சுத்தமா பிடிக்கல. இருந்தாலும் வாங்கி வந்தவர் முன்னாடி சொன்னா மனசு நோகுமேனு அவருக்கு முன்னாடி போட்டுகிட்டேன். அப்புறமா எங்க குடியிருப்புல நடந்த லேடீஸ் க்ளப் எக்சிபிஷன்ல அதை கொடுத்துட்டேன். இவர் எந்த காலத்துலயும் அந்த எக்சிபிஷனுக்கு போகாதவர். அன்னைக்கு என்ன தோன்றியதோ, போனார். அந்த ஸ்வெட்டரை பார்த்துட்டார். என்னிடம் வந்து கேட்டார், ;"ஏன் கொடுத்துட்ட?"னு. நான் சொன்னேன், "எனக்கு பிடிக்கல"னு. "சொல்லிருக்கலாம்ல?" என்றார். நான் காரணத்தை சொன்னேன்.

இப்படி, அவருக்கு பெண்களுக்கு எது பிடிக்கும் என்றெல்லாம் பெரிதாகத் தெரியாது. நல்லவேளையாக அவருக்கு பெண் குழந்தையும் கிடையாது. அதனால கல்யாண கவலையும் இல்லை."                       

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ் இலக்கியம் என்பது இன்று சர்வதேச இலக்கியமாக மாறிவிட்டது” - மனுஷ்யபுத்திரன்

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

"Tamil literature and culture is our land" - Manushyaputhiran

 

தமிழகத்தில் உள்ள  இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு குடியரசு தினத்தன்று கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன. அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைய வழியில் இதனைத் தொடங்கி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை நந்தனம் ymca அரங்கில் நடைபெறும் புத்தக காட்சியின் சிற்றரங்கில் நேற்று (பிப். 24) அன்று மாலை கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நக்கீரன் பொறுப்பாசிரியரும், இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கோவி. லெனின், கவிஞர் ஜெயபாஸ்கரன், எழுத்தாளர்கள் பாமரன், விஜயலட்சுமி, இனியன், நாகப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். 

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், “பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் வேர்களை விட்டு பிரிந்திருந்தாலும், தமிழ் அவர்களை அனைவரையும் ஒன்றிணைக்கிறது. நம்முடைய உண்மையான நிலம் என்பது நிலப்பரப்பு அல்ல; தமிழ் இலக்கியமும், பண்பாடும்தான் நம் நிலம். தமிழ் இலக்கியம் என்பது இன்று சர்வதேச இலக்கியமாக மாறிவிட்டது. காரணம், தமிழ் இலக்கிய தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வெவ்வேறு நாடுகளிலிருந்தும் எழுதுகிறார்கள். இன்று தமிழர்கள் போல் உலகில் பரந்துவாழும் சமூகம் என்பது அரிதிலும் அரிது. தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழை வளர்க்கிறார்கள். தமிழகம் என்பது ஈழத்தமிழர்களுக்கு இரண்டாம் தாயகம். உங்களை எல்லாம் பாதுகாக்கக் கூடிய, நீட்சியையும் பெரும் மாண்பையும் கொண்டுவரக்கூடிய ஒரு அரசும் முதல்வரும் இங்கு இருக்கிறார். 

 

உங்களின் ஒவ்வொரு தேவையையும், குறைகளையும் நிவர்த்தி செய்ய இங்கு ஒரு குழு இருக்கிறது. அதில், கோவி. லெனின் உள்ளிட்டோர்கள் இருக்கின்றனர். இவர், உங்கள் தேவைகளை எல்லாம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடியவர். தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் இலக்கிய பிரிவு ஒன்று உருவாகுவதற்கான மிகப் பெரிய அடித்தளமாகத் தான் இந்த நிகழ்ச்சியை நான் காண்கிறேன்” என்று பேசினார். 

 

 

Next Story

சிறுமியிடம் பாலியல் சீண்டல்- இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு! 

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

puducherry school children incident police investigation

 

புதுச்சேரி மாநிலம், துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்குச் சொந்தமான மைதானங்கள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, மைதானத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்த தடைகள் நீக்கப்பட்டு இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

 

மைதானம் மூடப்பட்டபோது முத்தரையர்பாளையத்தில் உள்ள இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

உடனே பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்துள்ளார். ஆனால் அவர்கள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் என கூறியுள்ளனர். மேலும் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிகிறது. 

 

இதையடுத்து சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். அதன்பேரில் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் பள்ளி சிறுமியிடம் பயிற்சியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதன் மீது கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்காததும் உறுதியானது. 

 

இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சிவசாமி  மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவானவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

 

இதில் கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன் மகன் ரோஹித் பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் ஆவார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது  குறிப்பிடத்தக்கது.