
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைந்து 22 ஆம் தேதி (இன்று காலை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி அதன் பிறகு இன்னும் தீவிரமடைந்து 23ஆம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றுதிசை வேகத்தை வைத்துப் பார்க்கையில் இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.