Skip to main content

கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை மாற்றி அனுப்பிய அரசு மருத்துவமனையினர்..!  

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

Government hospital sent interchanged corona victim's body

 

கடலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் உயிரிழந்த நோயாளியின் உடலை மாற்றி அனுப்பப்பட்டு புதைத்ததை, அதிகாரிகள் தோண்டி எடுத்து அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (55). இவருக்கு கரோனோ நோய்த் தொற்று ஏற்பட்டதால், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சேர்க்கப்பட்டார்.

 

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று (14.04.2021) ஜாகீர் உசேன் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தது குறித்து கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஜாகீர் உசேன் வீட்டுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஜாகீர் உடலைப் பெற்று அவரது சொந்த ஊரான ஆதிவராகநத்தம் பகுதிக்கு கொண்டு சென்று, அவர்களின் மத வழக்கப்டி புதைத்துள்ளனர். அதன்பிறகு கடலூர் கரோனா வாட்டில் உள்ள மருத்துவ அதிகாரிகள் ஜாகீர் உசேன் வீட்டுக்கு ஃபோன் செய்து அவரது உடலை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடையத்த அவரது குடும்பத்தினர், இதுகுறித்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்ததில் மருத்துவமனையிலிருந்து உடலை மாற்றி அனுப்பியது தெரிய வந்தது. அதாவது கரோனா வார்டில் உயிரிழந்த, பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் உடலை மாற்றி அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஜாகீர் உசேனின் உடலை அவரது உறவினர்கள் பெற்று அவரது சொந்த ஊரில் புதைத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன் முன்னிலையில் புவனகிரி போலீஸார், கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழுவினர் புதைக்கப்பட்ட ஆறுமுகத்தின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது சொந்த ஊரான புதுப்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த கரோனா நோயாளி ஒருவரின் உடலை மாற்றி அனுப்பிய சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்