சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. இவரின் மனைவி அருணாதேவி(35). இவர், சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை வழியாக கடலூர் செல்லும் அரசு பேருந்தில் கடலூர் செல்வதற்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து கள்ளக்குறிச்சி அடுத்துள்ள தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் நின்றது. அப்போது 2 பெண்கள் அந்த பேருந்தில் ஏறினர்.
அந்தப் பெண்கள் இருவரும், அருணாதேவி அருகே அமர்ந்துள்ளனர். அடுத்த பேருந்து நிறுத்தமான எலவனாசூர்கோட்டையில் அவர்கள் இருவரும் இறங்கியுள்ளனர். அருணாதேவி கடலூர் சென்றதும் தான் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 14 சவரன் நகை களவு போயிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அருணாதேவி, இந்த திருட்டு சம்பவம் குறித்து கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் பேருந்தில் தனது அருகே அமர்ந்துவந்த இரண்டு பெண்கள் மீது சந்தேகம் உள்ளதாக அருணாதேவி கூறியுள்ளார். இதையடுத்து அருணாதேவியின் புகார் எலவனாசூர் கோட்டை காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் செந்தில் வாசன் நகை திருடிய 2 பெண்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.