திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்றிரவு அந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணமென அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இந்த உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா என விசாரணை நடத்தக்கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அதில் அவர், “திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று காலை அடுத்தடுத்து 4 கரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த உயிரிழப்புகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. மிகவும் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசு கூடுதல் வேகத்தில் செயல்பட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முழு ஊரடங்கைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் உடனடியாக முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும்! மூடு... மூடு... மூடு... தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடு. காப்பாற்று.. காப்பாற்று.. காப்பாற்று.. கரோனா தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்று” என்று குறிப்பிட்டுள்ளார்.