
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது தனது மகனுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டி வேலூர் பெருமுகை பகுதியைச் சேர்ந்த முதியவர் மேஷாக் என்பவர் தனது மகன் சாகர் சாம்ராஜுடன் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்குக்கு முன்பு வந்துள்ளார்.
குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க ரசீது பெற வேண்டும் என்பதால், முதியவரின் மகன் சாகர் சாம்ராஜ் ரசீது பெறும் வரிசையில் காத்திருந்துள்ளார். அப்போது அலுவலகத்தின் அருகே படிக்கட்டில் அமர்ந்திருந்த மேஷாக் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மேஷாக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் தகவலறிந்த சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.