
ஈழத்தமிழர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், "நாட்டை விட்டு வெளியேற வேண்டும்" என்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த கருத்துக்கு மதிமுக முதன்மை செயலாளரும், எம்.பி.யுமான துரைவை கோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், 2015 இல் தமிழக கியூ பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 'உபா' சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரை, தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்; அப்படி வெளியேற்றப்படும் வரை, அகதி முகாமில் தடுப்புக்காவலில் இருக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே அவர் ," தான், மூன்றாண்டுகளாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை இந்தியாவில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் " உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விடுதலை புலிகளின் சார்பில் போரில் பங்கேற்றுள்ளேன். அந்த நாட்டுக்கு சென்றால் கைது, சித்ரவதையை எதிர்கொள்ள நேரிடும்' என்றும் அவர் மனுவில் கூறி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தத்தா, இங்கேயே தங்கிக்கொள்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் "இந்தியாவில் வசிப்பதற்கான அடிப்படை உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்' என்றும் நீதிபதி கூறினார்.''உலகம் முழுவதும் இருந்து அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது. நாங்கள் இங்கு 140 கோடி மக்கள் தொகையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம்,'' என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அவரது நாட்டில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது,' என்று போராளியின் வழக்கறிஞர் குறிப்பிட்டபோது, 'அப்படியெனில் வேறு நாட்டுக்கு போக வேண்டியது தானே' என்றும் நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.
நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் அமர்வின் வார்த்தை பயன்பாடுகள் முற்றிலும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவை. இன்னொரு நாட்டுக்கு போகச் சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. இந்தியாவில் இருக்கலாமா, இல்லையா என்பது குறித்த பிரச்சனையில் இந்தியாவில் தங்குவதற்கு இடமில்லை என்று சொல்லலாம். அதைத்தாண்டி தர்மசத்திரம், இன்னொரு நாட்டுக்கு போக வேண்டியதுதானே என்பதெல்லாம் சட்டத்திற்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள். புலம்பெயரும் அகதிகள் குறித்து ஐநா மன்றத்தின் பிரகடனத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றமே சர்வதேச மரபுக்கு எதிராக கருத்துக் கூறுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
உச்ச நீதிமன்ற அமர்வின் இந்த கருத்து எந்த ஆவணங்களிலும் இடம் பெறக்கூடாது. உடனடியாக நீக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.