Skip to main content

அதிமுகவுக்காக வாபஸ் பெற்ற திமுக வேட்பாளர்கள்... போட்டியின்றி தேர்வான கவுன்சிலர்கள்

Published on 22/12/2019 | Edited on 22/12/2019

அதிமுக முக்கிய பிரமுர்கள் போட்டியிடும் வார்டுகளில் திமுக மா.செக்கள், அதிமுக பிரமுகர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தங்களது கட்சியில் இருந்து டம்மியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்கிற குற்றச்சாட்டு திருவண்ணாமலை மாவட்ட திமுக மீது எழுந்தது. அப்படியெல்லாம் இருக்காது என்றே பலரும் கருதிவந்தனர். இந்நிலையில் மூன்று ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக பிரமுர்கள் வெற்றி பெற திமுக தொண்டர்கள் அதிர்ச்சியாகிவுள்ளனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 16வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக பிரமுகரான மாமண்டூரை சேர்ந்த ராஜீ வேட்புமனுதாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து 3 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். மூன்று பேரும் வாபஸ் பெற்றதால் ராஜீ போட்டியின்றி கவுன்சிலராக தேர்வு பெற்றார்.

 

DMK candidates withdrew for AIADMK

 

அந்த மூன்று பேரில் திமுக வேட்பாளரும் ஒருவர். துக்கானம் மனைவி செஞ்சி என்பவரை திமுக வேட்பாளர் பட்டியலில் அறிவித்திருந்தது. அவர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர், அவர்களும் திரும்ப பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

அதே வடக்கு மாவட்டத்தில் உள்ள வந்தவாசி ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன. இதில்,10வது வார்டில் வந்தவாசி கிழக்கு ஒ.செ லோகேஸ்வரனின் தாயார் ஜெயமணி மனுதாக்கல் செய்திருந்தார். அதே ஒன்றியத்தில் 14வது வார்டில் அதிமுகவின் வந்தவாசி மேற்கு ஒ.செ அர்ஜினன் மனைவி அற்புதம் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு வார்டுகளில் மனுதாக்கல் செய்திருந்தவர்கள் எல்லாம் வாபஸ் பெற்றதால் அதிமுகவை சேர்ந்தவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு கவுன்சிலர்களாகியுள்ளனர்.

இந்த ஒன்றியத்தில் 14வது வார்டில் நரசிம்மன் மனைவி நாராயணியையும், 10வது வார்டில் குப்பன் மனைவி துளசி என்பவரையும் நிறுத்தியிருந்தது திமுக. இவர்கள் இருவரும் திரும்ப பெற்றதாலே அதிமுக பிரமுர்களின் குடும்பத்தார் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் வந்தவாசி தொகுதி என்பது திமுகவின் கோட்டை என்பார்கள். திமுகவை சேர்ந்த அம்பேத்குமார் தான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ, திமுக வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சீதாபதி, மாவட்ட துணை செயலாளர் தரணிவேந்தன் இருவரும் இந்த வந்தவாசி பகுதியை சேர்ந்தவர்கள். இப்படி மாவட்டத்தின் முக்கிய பிரமுர்கள் உள்ள ஒன்றியத்திலேயே திமுக வேட்பாளர்கள் இருவர் வாபஸ் பெற்று அதிமுக பிரமுகர்களை வெற்றி பெறவைத்துள்ளார்கள். இதற்கு பின்னால் திமுக பிரமுகர்களின் ஒத்துழைப்பும் உள்ளது என குற்றம்சாட்டுகிறார்கள் திமுக உடன்பிறப்புகள்.

 

 

சார்ந்த செய்திகள்