Skip to main content

கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்...! 

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

Dindigul girl issue


திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியைச் சேர்ந்த கலைவாணி என்ற 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர், போலீசாரால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொல்லப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி இன்று 9ஆம் தேதி தமிழகம் முழுக்க உள்ள சலூன் கடைகள் முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் அடைக்கப்பட்டன. 

 

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,800-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டும் குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தியும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் வெங்கடேசன், தமிழர் கழக கட்சி மாவட்டச் செயலாளர் குணசேகரன், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இறந்த சிறுமியின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் சிலர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுத்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.