Skip to main content

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி; என்கவுண்டரில் கொள்ளையன் சுட்டுக்கொலை!

Published on 02/04/2025 | Edited on 02/04/2025

 

cuddalore dt mottai vijay police incident 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 43). இவர் நேற்று (01.04.2025) இரவு திண்டிவனத்தில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக்கொண்டு விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் தூக்கம் வந்ததன் காரணமாகக் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் அருகே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கியுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று தூங்கிக்கொண்டிருந்த பிரபுவை மிரட்டி அடித்து உதைத்து அவரிடம் இருந்து ரூ. 3000 பணம் மற்றும் செல்போனை பிடுங்கிச் சென்றுள்ளது. அதேபோன்று அதே சாலையில் உள்ள பெரியபட்டு என்ற இடத்தில் சீர்காழியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் திண்டிவனத்தில் இருந்து எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியை நிறுத்திவிட்டு அதிகாலை 03.30 மணிக்கு அசந்து தூங்கியுள்ளார்.

அப்போது அங்கு வந்த கும்பல் மணிமாறனைப் பணம் கேட்டுத் தாக்கியுள்ளனர். ஆனால் கையில் பணம் இல்லை என்று மணிமாறன் கூறியதும், கத்தியால் அவரின் தலையில் வெட்டியுள்ளனர். இதனால் வலியில் மணிமாறன் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நள்ளிரவில் லாரி ஓட்டுநர்களைத் தாக்கி வழிபறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மொட்டை விஜய் என்பவர் பதுங்கியுள்ள இடம் குறித்து போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் போலீசார் மொட்டை விஜய் உள்ள இடத்தை சுற்றி வளைத்து அவரை நெருங்கினர். அப்போது மொட்டை விஜய் கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு கோபி, கனபதி என்ற இரு போலீசாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீசார் காயமடைந்தனர். அதே சமயம் தற்காப்புக்காக போலீசார் மொட்டை விஜய்யை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன் காரணமாக மொட்டை விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மீது சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மொட்டை விஜய்யின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதோடு காயமடைந்த இரு காவலர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் மொட்டை விஜய் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் என்கவுண்டர் நடந்த இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.  அதோடு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கோரிமேடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைதாகி சில நாட்களுக்கு முன்புதான் விஜய் ஜாமினில் வெளியே வந்துள்ளார் எனவும், அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்