
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்க, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என எவ்வளவோ தீவிர நடவடிக்கைகள் எடுத்தாலும், அந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் காலம் யாருக்கும் தெரியவில்லை. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பொது அறிவிப்பு உள்ளது.
ஆனால், இதை ஒரு சிலர் கண்டுகொள்வதே இல்லை. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கடைவீதிகள், ஜவுளிக் கடைகளில் பெருமளவு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாகி விட்டது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிது. வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், சந்தை உட்பட பகுதிகளில் பொதுமக்கள் எந்த இடைவெளியையும் பின்பற்றுவதில்லை.
இந்த நிலையில், ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் குழு, வணிக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கடைகளில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு உடனே அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சில ஜவுளிக் கடைகளில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனால் அந்த ஜவுளிக் கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 20 ஜவுளிக் கடைகள், முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத மக்கள் என ஒரே நாளில் மட்டும் ரூபாய் 40 ஆயிரத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஏராளமான ஜவுளிக் கடைகள் உள்ளன. தீபாவளிக்கு சில நாட்களே உள்ளதால், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் முகக்கவசமும் முறையாக அணிவதில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல், ஆங்காங்கே திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். வணிக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அரசும் அதிகாரிகளும் என்னதான் நடவடிக்கை, விழிப்புணர்வு எனக் கூறினாலும் பண்டிகையான தீபாவளி நெருங்க நெருங்க ஒவ்வொரு ஊரிலும் மக்கள் தங்களது தேவைகளுக்காக ஜவுளி மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. மறுபுறம் கரோனா வைரஸ் என்ற அரக்கனையும் மக்கள் எதிர்கொண்டு போராட வேண்டிய கட்டாயம்தான்.