Skip to main content

“திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்கு காமராசரின் பெயர் சூட்டப்படும்” - முதல்வர் அறிவிப்பு!

Published on 01/04/2025 | Edited on 01/04/2025

 

CM mk stalin announced library to be built in Trichy will be named after Kamaraj

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (01.04.2025) கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் நூலகங்கள் பற்றிப் பேசினார். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்டிருக்கிற நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது என்ற கருத்தினை வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதிலே குறிப்பாக, பொதுப் பணித் துறை சார்ந்த நான்கு ஆண்டு சாதனைகள் தொடர்பான புத்தகத்தில், ஏற்கெனவே இந்த அவையில் அறிவிக்கப்பட்டவாறு, திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நான் பார்த்தேன்.

திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரையில், கலைஞரின் கரங்களால் கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்திற்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமானப் பணிகள் முடிவுற்று, மாபெரும் சாதனை செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்பதை எல்லோரும் அறிவர். இதுவரை சுமார் 16 இலட்சம் பொது மக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்திருக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, அண்மையில் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்ட போது, கோவையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று என்னால்அறிவிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதேபோன்று, திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத்திற்கு கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்தப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.

எனவே, தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, இலட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, திருச்சியில் சுட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசரின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட வேண்டுமென்று முதலமைச்சர் என்ற முறையில் நான் (மு.க. ஸ்டாலின்) கேட்டுக் கொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்