Skip to main content

சீரான மின்சாரம் தேவை; மெழுகுவர்த்தி ஏந்தி மறியல் போராட்டம்!

Published on 16/04/2025 | Edited on 16/04/2025

 

 Candlelight protest demanding balanced electricity supply!

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வெங்கத்தூர் பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததால் இப்பகுதி மக்கள் கடும் அவதியுற்று வந்தனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்சாரத்தை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர கோரியும், கடந்த 6 மாதங்களாக மணவாளநகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.ஆனால் இதுநாள் வரையிலும் அவர்கள் எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த நிலையில் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு இந்த டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டு குறைந்த மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. 

மேலும் அடிக்கடி பகல் இரவு நேரங்களில் மின்தடையும் ஏற்பட்டது.இதனால்  தற்போது உள்ள சுட்டெரிக்கும் கோடை காலத்தில் சிறு குழந்தைகள்,முதியவர்கள், கர்ப்பிணிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் என  பலதரப்பட்ட மக்களும் கடும் அவதிபற்று வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கத்தூர்  பகுதியைச் சேர்ந்த திரளான  பொதுமக்கள் நேற்று சுமார் 8.30 மணி அளவில் திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையான வெங்கத்தூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் தங்களுக்கு குறைந்த மின்னழுத்த கொண்ட  மின்சாரம் வழங்குவதை கண்டித்தும், காலதாமதம் செய்யாமல் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான முறையில் மின்சாரம் வழங்க வலியுறுத்தி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் மற்றும் மணவாள நகர் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இது சம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த வழியாக சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.சீரான மின்சாரம் வழங்கக்கோரி வெங்கத்தூர் பகுதி மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சாலை மறியல் போராட்டம். திருவள்ளூர் பூந்தமல்லி சாலையில் அரை மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

சார்ந்த செய்திகள்