
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. இந்த கோயிலில், யார் முதலில் திவ்ய பிரபந்தம் பாடுவது என்பது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பான வழக்கு, உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், கோயிலில் இருதரப்பினரும் பிரபந்தங்கள் பாடக் கூடாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (12-05-25) காலையிலேயே, இக்கோயிலில் திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோயிலில், வைகாசி பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 2ஆம் நாளான இன்று காலையில் அம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் முக்கிய பகுதிகளில் வீதி உலா வந்தார்.
கங்கை கொண்டான் மண்டபத்தில் மண்டகபடி கண்டருளியபோது, பெருமாளின் முன்பு மந்திர புஷ்பம் பாடி தென்கலை பிரிவினர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் மோதலை ஏற்படுத்தியது. இருபிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலா, சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.