Skip to main content

பாஜகவின் தில்லு முல்லும்  தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும் - பெ.மணியரசன்

Published on 21/05/2018 | Edited on 22/05/2018

 

perani2

 

 


நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் விமர்சனம்:

’’வாக்குரிமை தான் மக்களாட்சியின் உயிர்த்துடிப்பு என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்தது. காலப்போக்கில் வாக்களிப்பது என்பது கவர்ச்சி காட்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வாக்குகளைக் களவாடிக் கொள்வது என்பதாகச் சீரழிந்தது. அதன்பிறகு, பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படுவதாக “வாக்குரிமை” மாற்றப்பட்டது. அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பணம், பதவி ஆசை காட்டி கடத்திக் கொண்டு போவது, கட்சி மாறச் செய்து பலனடைவது என்ற அரம்பத்தனமாக (ரவுடித்தனமாக) “சனநாயகம்” மாறியது.

 

 இந்தச் சின்னத்தனங்கள் அனைத்தும் இப்போது கர்நாடக பதவி வேட்டையில் அரங்கேறின; ஆட்டம் போடுகின்றன. இந்த ஆட்டத்தில் முறை தவறி – முதல்வர் பதவியைப் பெற்ற பா.ச.க.வின் எடியூரப்பா மூன்று நாளில் அதை இழந்தார். அறம், ஒழுக்கம், சட்டம் நீதி என்பவற்றைப் பற்றி கவலைப்படாத பா.ச.க. கட்சியைச் சேர்ந்த கர்நாடக ஆளுநர் வச்சுபாய் வாலா, சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற குமாரசாமியைப் புறக்கணித்துவிட்டு, அறுதிப்பெரும்பான்மை பெறாத பா.ச.க.வைச் சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராக்கி தன்னல நோக்கில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார். 

 

கடந்த 12.05.2018 அன்று நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. – 104, காங்கிரசு – 78, மதச்சார்பற்ற சனதா தளம் – 37 இடங்களைக் கைப்பற்றின. தற்சார்பாளர்கள் (சுயேச்சைகள்) – 2 பேர். முதலமைச்சர் பதவி ஏற்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் 104 உறுப்பினர்களைக் கொண்ட பா.ச.க.வின் எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார், ஆளுநர் வச்சுபாய் வாலா!

 

ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை விலைக்கு வாங்கப் பல கோடி ரூபாய் தருவதற்கு தூது விட்டுப் பார்த்தது பா.ச.க.! அத்துடன் சாதி மற்றும் அமைச்சர் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்திப் பார்த்தது. ஆனாலும், காங்கிரசும், மதசார்பற்ற சனதா தளமும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை வளைத்து, கடத்தி, பதுக்கி வைத்துக் கொண்டார்கள். பா.ச.க. அரசியல் “ரிஷி”களின் பாச்சா பலிக்கவில்லை! 

 

அதேவேளை தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட காங்கிரசும், சனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்து, ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதலமைச்சராகிட ஒப்புக் கொண்டுள்ளன. முப்பத்தேழு உறுப்பினர்களை மட்டும் கொண்ட குமாரசாமி முதலமைச்சர்; 78 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசுக் கட்சிக்கு முதலமைச்சர் பதவி இல்லை! 

 

 

தேவகௌடா – குமாரசாமி குடும்பத்தாரின் பதவி வெறிக்கு, முதலமைச்சர் என்ற  தீனி போட்டாலொழிய பாரதிய சனதாக் கட்சி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது என்று கருதிய காங்கிரசு, இப்போதைக்கு குமாரசாமி தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது.

 

 குமாரசாமியோ ஐந்தாண்டுகளும் நான்தான் முதல்வர் என்று இப்போதே சொல்லத் தொடங்கிவிட்டார். காலம் செல்லச் செல்ல காங்கிரசு – ம.ஜ.த. கூட்டணியில் பதவிச் சண்டை வருவதற்கு வாய்ப்புண்டு! ஏனெனில், இரண்டு கட்சித் தலைமைகளும் “இலட்சிய செம்மல்”கள் இல்லை! பதவி வெறி வந்திட – பத்தையும் இழக்கத் துணிந்த கட்டைகள்! 

 

வரும் 23.05.2018 அன்று காங்கிரசு – ம.ஜ.த. கூட்டணியின் முதல்வராக குமாரசாமி பதவியேற்க இருக்கிறார். நீண்டகாலமாகக் கங்காணி அதிகாரப் பசியில் துடித்துக் கிடந்த குமாரசாமி, இப்போது கோயில் கோயிலாகச் சென்று கும்பிட்டு பதவிப் பூசை நடத்தி வருகிறார். 

 

சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதா என்பதை அவர்கள் கையளிக்கும் உறுப்பினர் பட்டியலிலிருந்து கணக்கிட்டு முடிவு செய்து, பெரும்பான்மை ஆதரவு உள்ள ஒருவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். உறுதியான பெரும்பான்மை இருக்கிறதா என்ற ஐயம் எழுமானால், சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை மெய்ப்பிக்க கெடு விதித்திருக்க வேண்டும். 

 

பா.ச.க.வுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும், ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மேகாலயா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில், கட்சித்தாவல் மூலம் சிறுபான்மை பா.ச.க. ஆட்சியை பெரும்பான்மை ஆட்சியாக்கும் “சாகசத்தை” – ஆன்மிகம் பேசும் பா.ச.க. ஆளுநர்கள் செய்தார்கள். அந்த தில்லுமுல்லு காங்கிரசு – மதச்சார்பற்ற சனதா தள “சாகசங்களால்” முறியடிக்கப்பட்டது! 

 

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும் பா.ச.க. தலைவர் அமித்சாவும் எந்தத் தில்லுமுல்லும் செய்யத் தயங்காதவர்கள் என்பதற்கு, அவர்களின் கர்நாடகப் பித்தலாட்டம் மற்றுமொரு எடுத்துக்காட்டு! 

 

ஓர் ஆறுதல்; உச்ச நீதிமன்றம் சட்டப்பேரவையில் எடியூரப்பா மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒரு நாள் அவகாசம் வைத்து ஆணையிட்டது. அந்தநிலையில்தான், பெரும்பான்மை பெற முடியாத எடியூரப்பா பதவி விலகினார். 

 

ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. ஆகிய இரண்டும் ஆன்மிக ஒழுக்கம் இல்லாதவை மட்டுமல்ல, அரசியல் ஒழுக்கமும் இல்லாதவை. சனநாயகம் என்றால் அவற்றிற்கு ஒவ்வாமை! தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், திட்டக்குழு போன்ற சனநாயகத்தை உறுதி செய்யும் நிறுவனங்களை ஒவ்வொன்றாகக் காலி செய்து வருகின்றன பா.ச.க.வும், ஆர்.எஸ்.எஸூம்!

அதேவேளை, மதச்சார்பற்ற சனதா தளமும், காங்கிரசும் பொது இலட்சியமோ – பொது வேலைத்திட்டமோ எதுவுமின்றி அதிகார வேட்டைக்காகக் கூட்டணி சேர்ந்துள்ளன. 

 

தமிழ்நாட்டில் துணை முதல்வர் ஒ. பன்னீர்ச்செல்வம், “பா.ச.க.வின் தென்னக நுழைவுக்கான மணியோசை ஒலித்துவிட்டது” என்று வாழ்த்துக் கூறி, பா.ச.க.வின் சனநாயக விரோத – சட்ட விரோதச் செயல்களை வரவேற்றுள்ளார். 

 

செயலலிதா அம்மையார் இறந்தவுடன், தமிழ்நாட்டில் அதிகார வேட்டைக்காக சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கடத்திப் பதுக்கி வைத்த “சாகசங்கள்” தமிழ்நாட்டிலும் நடந்தன. கர்நாடகத்தில் நடந்த விகாரமான அதிகார வேட்டை அரசியல், தமிழ்நாட்டில் நடக்காது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை! 

தேர்தல் அரசியல் மிகமிக மோசமாகச் சீரழிந்துவிட்டது.

 தமிழ்நாடு இந்தச் சீரழிவிற்கு விதி விலக்கன்று! தேர்தல் கட்சிகளுக்கு வெளியே, மக்கள் தன்னெழுச்சியாக தங்கள் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திடப் போராடுவது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதேபோல், சனநாயக உரிமைகள் பலவற்றைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களையும் தேர்தல் கட்சிகளுக்கு வெளியே தன்னெழுச்சியாக ஆற்றல் மிகு இளையோரும், அனுபவமிக்கப் பெரியோரும் இணைந்து நடத்த வேண்டும். இல்லையேல், எந்த இலட்சியமும் இன்றி எந்தப் பொது நல அக்கறையுமின்றி – தாயகப் பற்றும் தமிழினப் பற்றும் இன்றி, அதிகார வேட்டைக்கு அடித்துக் கொள்ளும் அரசியல் பெருச்சாளிகளின் பின்னால், மக்கள் அணிவகுத்து தங்கள் வாழ்வை அழித்துக் கொள்வதுதான் மிஞ்சும்! பழைய பெருச்சாளிகள் போதாதென்று, இரசினிகாந்து – கமலகாசன் போன்ற புதிய பெருச்சாளிகளும் அதிகார வேட்டை அரசியலுக்குள் அரிதாரம் பூசிவரும் அவலம் தொடரும்!  

 

தமிழ்நாட்டு உரிமைகள் இந்திய அரசாலும் அண்டை மாநிலங்களாலும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மேலிருந்து கீழ் வரை சமூகக் கட்டமைப்பு ஊழலால் உலுத்துப்போய் நிற்கிறது! வேலையின்மை, விலை உயர்வு, வாழ்க்கைப் பாதுகாப்பின்மை, வறுமை ஆகியவற்றால் மக்கள் ஒவ்வொரு நொடியும் குமுறுகின்றனர். 

 

தேர்தல் ஆதாயக் கட்சிகளால் தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியவில்லை. 

தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்த முடியவில்லை! இவ்வேளையில், தேர்தல் ஆதாயக் கட்சிகளுக்கு அப்பால் நடந்து வரும் தமிழர் போராட்டங்கள் மேலும் மேலும் வலுப்பட வேண்டும்; மேலும் மேலும் வரிவடைய வேண்டும் என்ற உணர்வையும் உறுதியையும் தமிழர்கள் பெற வேண்டும்!

 

காமவெறியைவிட கொடியது அதிகாரவெறி – பதவிவெறி – பணவெறி என்ற நடைமுறை உண்மைகளை நாம் தமிழ்நாட்டிலேயே பார்த்திருக்கிறோம். எனவே, தமிழர் தன்னெழுச்சித் தற்காப்புப் போராட்டங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்! 
’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது