Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டி நூதன போராட்டம்!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018
fc


சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறவை மாடுகளின் கொம்புகளில் கருப்புக்கொடி கட்டி நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.


சென்னை & சேலம் இடையே எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யும் முதல்கட்ட பணிகளை சேலம் மாவட்ட நிர்வாகம் செய்து முடித்துள்ளது. இந்த சாலைத் திட்டத்துக்காக சேலம் மாவட்டத்தில் மட்டும் 248 ஹெக்டேர் தனியார் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. 


தென்னை, பாக்கு, வாழை, கரும்பு, நெல் பயிரிடும் ஏராளமான விவசாயிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் குரலுக்குக் கொஞ்சமும் செவி சாய்க்காத சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, டிஆர்ஓ சுகுமார் மற்றும் காவல்துறையினர், கடும் அடக்குமுறைகளைக் கையாண்டு நிலம் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.


இந்நிலையில் குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், குப்பனூர் பகுதி விவசாயிகள் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நூதன முறையில் போராடி வருகின்றனர்.


கடந்த 27ம் தேதியன்று குள்ளம்பட்டி விவசாயிகள் அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் திடலில் பொங்கல் வைத்து, அம்மனிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தை நூதன முறையில் நடத்தினர். 


அடுத்தக்கட்டமாக, இன்று (ஜூலை 1, 2018) அவர்கள் அதே கோயில் திடலில் கறவை மாடுகளின் கொம்புகளில் கருப்புக்கொடி கட்டி நூதன போராட்டத்தை முன்னெடுத்தனர். ''விளை நிலம் எங்கள் உரிமை... அரசாங்கமே வெளியேறு'' என்று அச்சிட்ட ஃபிளக்ஸ் பேனரை போராட்டக் களத்தில் கட்டியிருந்தனர். 


ஒவ்வொரு விவசாயியும் கைகளில், ''வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழ விடு'', ''வேண்டாம் வேண்டாம் எட்டு வழிச்சாலை வேண்டாம்'', ''வெளியேறு வெளியேறு நிலத்தை விட்டு அரசாங்கமே வெளியேறு'', ''சுரண்டாதே சுரண்டாதே இயற்கையை சுரண்டாதே'' என்ற முழக்கங்களை அச்சிட்ட தட்டிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த மூன்று எஸ்ஐக்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட காரிப்பட்டி காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்தனர். அவர்கள், ''நான்கு பேருக்கு மேல் கூடினாலே போராட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?. இந்த இடத்தில் போராட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?,'' என்று மிரட்டினர். 


அதற்கு விவசாயிகள், நாங்கள் குலதெய்வ கோயிலில் கூடி வழிபாடு நடத்துகிறோம். கடவுளைக் கும்பிடக்கூட உரிமை இல்லையா? என்று காவல்துறையினரிடம் கேட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்புகள் ஏற்பட்டன. ஆனாலும், நூதன போராட்டம் முடியும் வரை காவல்துறையினர் அங்கிருந்து கலைந்து செல்லாமல், போராட்ட நிகழ்வையும், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் விவசாயிகளையும் செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.


இதுகுறித்து முனியப்பன் (65) என்ற விவசாயி கூறுகையில், ''எட்டு வழிச்சாலையால் எங்களுக்குச் சொந்தமான 700 பாக்குமரங்களும், 100 தென்னை மரங்களும், மெத்தை வீடு ஒன்றும், போர்வெல் கிணறும் பறிபோகின்றன. எங்களுக்கு இந்த எட்டுவழிச்சாலை தேவையில்லை. சாலையோரத்தில் சுவர் எழுப்பி விட்டால் எப்படி பிழைக்க முடியும்? சேலம் - கள்ளக்குறிச்சி ரோடு போல திறந்த நிலையில் விட வேண்டும்.


எட்டு வழிச்சாலை பெரிய பெரிய கொள்ளைக்காரர்களுத்தான் பயன்படும். இப்போதுள்ள சாலையையே இன்னும் அகலப்படுத்தலாம். ஆனால் அந்தப் பணிகளை அப்படியே விட்டுவிட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'இந்த சாலைத் திட்டம் மத்திய அரசாங்க திட்டம். அதற்கான நிலத்தை எடுத்துக் கொடுப்பதுதான் எங்கள் வேலை,' என்கிறார். இதனால் அத்தனை விவசாயிகளும் பாதிக்கின்றனர். தேவையில்லாத வேலையை இவர்கள் செய்கின்றனர். எந்த விவசாயிக்கும் மூன்று மணி நேரத்தில் சென்னைக்குப் போய் செய்ய வேண்டிய வேலை ஒன்றும் இல்லை. 


இந்த சாலைக்கு நிலம் எடுத்தே தீருவேன் என்றால் மக்கள் எல்லாரையும் சுட்டுத்தள்ளிடுங்க போவட்டும். இப்போ பாருங்க எங்களை அரெஸ்ட் பண்ணுவேனு சொல்றாங்க. கோயிலில் சாமி கும்பிடக்கூட உரிமை இருக்கா இல்லையா? நீங்க நினைச்சிக்கிட்டா அரெஸ்ட் பண்றது... அப்புறம் முட்டுக்கல் போட்டதுக்கப்புறம் ரிலீஸ் பண்றது என்ன அர்த்தம்? நாங்க என்ன கொலையா செஞ்சிட்டோம்?,'' என்றார்.


பூங்கொடி என்ற விவசாயி கூறும்போது, ''எங்களுடைய இரண்டரை ஏக்கர் தென்னந்தோப்பு, மாந்தோப்பு, வீடு எல்லாமே போகுதுங்க. நாலஞ்சு தலைமுறையாக இங்கதான் வசிக்கிறோம். இப்போது இடத்தைப் பிடுங்கிட்டு வெளியே போ என்றால் எங்கே போவோம்? பசுமையை அழிச்சிட்டு பசுமை வழிச்சாலை தேவையா? எங்க மண்ணும், வீடும் இருந்தால் போதும். எங்கள் வாழ்வாதாரமே விவசாயம்தான். எங்களுக்கு எட்டு வழிச்சாலை தேவையில்லை,'' என்றார். 


முத்து என்ற விவசாயி கூறுகையில், ''நான் ஒரு சிறு விவசாயிங்கய்யா. ஒரு ஏக்கர் பரப்பளவில் 400 பாக்கு மரங்களும், 70 தென்னை மரங்களும், கிணறும் இருக்குங்கய்யா. இவை அத்தனையும் எட்டு வழிச்சாலையால் பறிபோகப் போகிறது. இந்த நிலத்தை வைத்துதான் எங்க பையனை பி.இ., படிக்க வெச்சோம். மகளை கல்லூரிக்கு அனுப்பி இருக்கோம். 


ஒரு பாக்கு மரத்துக்கு வருஷத்துக்கு 4000 ரூபாய் வருமானம் வரும். தென்னைக்கு ஒரு மரத்துக்கு 5000 ரூபாய் வருமானம் வரும். இதனால் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைச்சிட்டு இருந்தது. இதையும் எட்டு வழிச்சாலைங்கிற பெயரில் முட்டுக்கல் அடிச்சி நிலத்தை பிடுங்கிட்டாங்கய்யா. நீர்வழிப்பாதை எல்லாத்தையும் தடுத்துட்டாங்க. இப்போதுகூட கோயிலில் பூஜை பண்ண வந்தோம். அதையும் தடுத்து கைது செய்வோம்னு மிரட்டுறாங்கய்யா. எங்களைப் பிடித்துச் சென்றால் கால்நடைகளோடுதான் உள்ளே போவோம். தமிழ்நாட்டில் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கய்யா...'' என்றார். 


இதற்கிடையே, கோயில் பூசாரி முருகேசன் திடீரென்று அருள் வந்து ஆடினார். அவர் அருள்வாக்கு கூறுகையில், ''நான் இந்த இடத்துலதான் படுத்துருப்பேன். உங்களோட எல்லா கோரிக்கையும் நிறைவேத்திக் கொடுப்பேன். பயப்படாதீங்க. நான் இருக்கிறேன். எட்டு வழிச்சாலைய அமைய விடமாட்டேன். எப்படி இந்த பூவா பறக்கிறாங்களோ அப்படி பறந்து போயிடுங்வாங்க. தமிழ்நாடு முழுசும் ரோடு வராது... சத்தியம் பண்ணி சொல்றேன்...,'' என்று பெரியாண்டிச்சி அம்மன் மீது சத்தியம் செய்தவாறு அருள்வாக்கு கூறினார்.


 

சார்ந்த செய்திகள்