தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தமிழக அரசு நிதி மேலாண்மையில் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2018 – 2019 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு அவ்வளவாக செய்யப்படாதது மட்டுமின்றி பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமார் மூன்றரை லட்சம் கோடி இருப்பதாகவும் இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக புதிய கடன் வாங்கப்போவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஈழத்தமிழ் அகதிகளுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட சுமார் ஏழு கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதுபோலவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் பத்து விழுக்காடு அளவிற்கே உயர்வு இருக்கிறது. ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் மத்திய அரசு சுமார் 1500 கோடி அளவிற்கு பாக்கி வைத்திருப்பதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வாதாடிப் பெறுவதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு செய்யவில்லை.ஆனால் ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையின் அளவை தமிழக அரசு குறைத்துள்ளது. இது கண்டனத்துக்குரியதாகும்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்க மையம், தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத் தக்கதாகும் அங்கே அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் ஆய்வு இருக்கை ஒன்றை நிறுவ வேண்டும் எனவும், அவரது பெயரில் விருது ஒன்றை ஏற்படுத்த வேண்டுமெனவும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். அதுகுறித்த அறிவிப்புகள் மானியக் கோரிக்கையின் போதாவது செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் ஆறு வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தும் இதுவரை மத்திய அரசு அதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதைப்பற்றி இந்த நிதிநிலை அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
வரி வருவாய்ப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. 2015 முதல் 2018 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த தொகையான 81570 கோடி ரூபாயை வழங்காமல் அதைக் குறைத்து 72234 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கர்நாடகாவுக்கு 155% ஆகவும், மகராஷ்டிராவுக்கு 149% ஆகவும், ஆந்திராவுக்கு 128% ஆகவும் இருக்கும்போது தமிழ்நாட்டுக்கு 89% ஆக மட்டுமே உள்ளது. இது மத்திய அரசு திட்டமிட்ட முறையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்பதற்குச் சான்றாகும். இந்த அநீதியை எதிர்த்து வலுவாகக் குரலெழுப்பவேண்டியது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும்.
தொகுத்துக் கூறினால், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட குறைக்கப்பட்டிருப்பதும், கடன்சுமை அதிகரித்திருப்பதும், புதிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருப்பதும் தமிழக அரசு நிதி மேலாண்மையில் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகிறது. ஒட்டுமொத்தத்தில் ’இதுவொரு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்’ என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தாகும். இவ்வாறு கூறியுள்ளார்.