
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் இந்த பேச்சு பூதாகரமான நிலையில் இது குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல் துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
எழும்பூர் போலீசார் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர். தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்த காவல்துறையினர் கடந்த 17.11.2024 ஆம் தேதி சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டுமென நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்திருந்தார். 'தான் சிங்கிள் மதர் என்பதாலும் தனக்கு ஸ்பெஷல் சைல்டு உள்ளதால் அவரை பராமரிப்பதற்கு நான் மட்டுமே உள்ளேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி தயாளன் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளார்.