Skip to main content

28 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கப்  போகிறார்களா?

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், இந்த டெட் எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தடுப்பதற்கு  நடக்க உள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் ‘இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம்’, 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறுகிற மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கெனவே ஆசிரியராக பணியாற்றுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

 

teachers



இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்ததால், தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற ஆசிரியர்களுக்கு 2016-ம் ஆண்டு வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த அவகாசம் 2019 மார்ச் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிந்துவிட்ட நிலையில் , தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 28 ஆயிரம் ஆசிரியர்கள் (டெட்) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருக்கின்றனர். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்படத்தக்கது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், ‘தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மார்ச் மாதத்துடன் கால அவகாசம் முடிந்துவிட்டது. இதனால் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

teachers



இதையடுத்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதனால், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் பணியில் நீடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதுதவிர, அரசுப் பள்ளிகளில் சுமார் 500 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. கடைசியாக 2017-ல் டெட் தேர்வு நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் டெட் அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, ஆசிரியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதால் அவர்களது குடும்பங்கள் மன உளைச்சலில் தவிக்கின்றன. எனவே, டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் இத்துறை சம்மந்தப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற, ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.எனவே ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதியும் கருணை அடிப்படையில் விரைவில் நடக்கவுள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்