Skip to main content

ஒவைசி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

TN ASSEMBLY ELECTION AIMIM PARTY CANDIDATES ANNOUNCED

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் குறைவான நபர்களே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இன்று (15/03/2021) சுபமுகூர்த்த நாள் என்பதால், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, 'எடப்பாடி' சட்டமன்றத் தொகுதியிலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி, தினகரன் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

 

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்களும், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடவுள்ள சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், அ.ம.மு.க. கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் போட்டியிடும் 3 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் வக்கீல் அஹமத், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் அமீனுல்லா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் சின்னமான 'பட்டம்' சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்