தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் ஆலோசனைக் குழுக்கள், ஒருங்கிணைப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில், விசிகவிற்கு இரட்டை இலக்கத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” எனத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் வி.சி.க. நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தனிப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்போம் என வன்னி அரசு கூறியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து ஆகும்.
கூட்டணியில் இவ்வளவு தொகுதிகள் வேண்டும் என விசிக சார்பில் முன்கூட்டியே நிபந்தனை வைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு நிபந்தனைகளும் வைத்ததில்லை. முந்தைய தேர்தல்களில் விசிக இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட்டிருக்கிறோம். கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகள் விரும்புவது இயல்பான ஒன்று தான். இருப்பினும் கூட்டணியில் பல கட்சிகள் உள்ள போது அதற்கு டன்அனுசரித்து விசிகவின் முடிவை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.