
கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி அரசை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷி சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது என்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 15 கவுன்சிலர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தனி கட்சி அறிவித்திருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள 15 நகராட்சி கவுன்சிலர்களான ஹேம்சந்த் கோயல், முகேஷ் கோயல், ஹிமானி ஜெயின், தேவிந்திர குமார், ராஜேஷ் குமார் லாடி, சுமன் அணில் ராணா, தினேஷ் பரத்வாஜ், ருணாஷி ஷர்மா, மணிஷா, சாஹிப் குமார், ராக்கி யாதவ், உஷா ஷர்மா, அசோக் பாண்டே ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி ‘இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி’ என்ற தனி அரசியல் கட்சியை உருவாக்குவதாக அறிவித்துள்ளனர். இந்த அணிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோயல் தெரிவித்துள்ளதாவது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பொதுப் பணிகளையும் செய்ய முடியாததால், நாங்கள் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியைத் தொடங்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
கவுன்சிலர்கள் சமர்ப்பித்த கூட்டு ராஜினாமா கடிதத்தில், ‘நாங்கள் அனைவரும் நகராட்சி கவுன்சிலர்கள் 2022 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக டெல்லி மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஆனால் 2022 ஆம் ஆண்டு டெல்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்த போதிலும், கட்சியின் உயர் தலைமையால் டெல்லி மாநகராட்சியை சுமூகமாக நடத்த முடியவில்லை. உயர்மட்டத் தலைமைக்கும் நகராட்சி கவுன்சிலர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகக் குறைவாக இருந்தது. இதன் காரணமாக கட்சி எதிர்க்கட்சிக்குள் வந்தது. பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால், கவுன்சிலர்களான நாங்கள் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறோம்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் அவைத் தலைவராகவும், டெல்லி மாநகராட்சி கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து வந்த முகேஷ் கோயல், கட்சியில் இருந்து வெளியேறியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 15 கவுன்சிலர்கள், கட்சியில் இருந்து விலகி தனி கட்சி அறிவித்திருப்பது ஆம் ஆத்மி கட்சியை அதிர வைத்துள்ளது.