
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. (நிறுவன) தலைவர் ராமதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பா.ம.க. செயல் தலைவராகச் செயல்படுவார்” எனப் பேசியிருந்தார். ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பா.ம.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் “நானே பா.ம.க தலைவராகச் செயல்படுவேன்” என பா.ம.க. (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணியும் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.05.2025) வன்னியர் சங்கம் சார்பில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் கடுமையாகச் சாடியிருந்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் தான் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது நேற்று (16.05.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 8 மாவட்டச் செயலாளர்களும், 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர். மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மேலும் ராமதாஸ் தலைமையில் இன்று (17.05.2025) நடைபெற்ற மகளிரணி, மாணவரணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்திலும் சொற்ப அளவிலான நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பா.ம.க.வின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில், “இன்றைக்குப் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகி இருக்கிறது நான் மறைத்துப் பேசவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி என்பது ஒரு குடும்ப பாசத்தோடு இருக்கிற கட்சி. அந்த குடும்ப பாசத்தில் இருக்கிற கட்சிக்கு ஒரு சின்ன நெருக்கடி ஏற்பட்டால் கூட மிக விரைவில் சுமுகமான தீர்வு ஏற்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு ராமதாஸிடம் நேற்று இரவு வரைக்கும் நான் பேசினேன். சென்னையில் அன்புமணி உடன் இரவும் பேசினேன், காலையிலும் பேசினேன்.
அதனால் இது ஒரு குடும்ப பாசத்தோடு இருக்கிற கட்சி. மிக விரைவில் ஒரு சுமுகமான தீர்வு வரும் அப்படிங்கிற நம்பிக்கையோடு நான் தீவிரமாக முயற்சி எடுத்துகொண்டு இருக்கிறேன். தீவிரமாக முயற்சி எடுக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் வரப்போகிறது. இது வேறு யாரும் இல்லை. இருவரும் ஒன்றாகச் சந்தித்துப் பேசுவார்கள். அந்த செய்தியைப் பார்க்கத் தான் போகிறீர்கள். நான் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். தேர்தல் நெருங்குகிறதுக்கு முன்னாள் சந்தித்துப் பேசுவார்கள். நல்ல கூட்டணி அமைப்பார்கள். பா.ம.க. இடம்பெறும் கூட்டணி தான் தேர்தல் வெற்றி பெறும் என்கிற பழைய நிலைமையை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கிக் காட்டும். அந்த நம்பிக்கையை முன்னெடுத்து நாங்கள் மனசாட்சியோடு செய்கிறோம். என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த மணியைப் பொறுத்தவரைக்கும் உண்மையாக இருப்பேன். மனசாட்சியோடு செயல்படுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.