
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி என்றாலும் கடந்த 2011 தேர்தலில் திமுக உதயம் சண்முகம் வெற்றி பெற்ற பிறகு அடுத்து நடந்த 2 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியில் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு முறை தோற்ற ராமச்சந்திரன் மறுமுறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
ஓடாய் உழைத்து திமுகவுக்கு சாதகமாக தொகுதியை வைத்திருக்கிறோம் ஆனால் தலைமை திருநாவுக்கரசருக்காக என்று அவரது மகனுக்கு ஒதுக்குவதாக திமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் மாஜி சட்டமன்ற உறுப்பினரான உதயம் சண்முகம் மட்டும் வெளிப்படையாக பேசிவருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அறந்தாங்கியில் நடந்த ராமநாதபுரம் வேட்பாளரான நவாஸ்கனியின் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ராஜகண்ணப்பன் ஆகியோர் முன்னிலையிலேயே, ‘நாங்க தொகுதியை வளர்த்து வச்சிருக்கிறோம். ஆனால் தேர்தல்ல சின்னம் மாற்றி ஓட்டு போடுகிறோம். ஆனால் 2026 தேர்தல்ல அறந்தாங்கியில உதயசூரியன் சின்னத்து ஓட்டு போடுற மாதிரி தொகுதியை மீட்டுத் தானும். இல்லன்னா, அறிவாலயம் நோக்கிப் போவோம்..’ என்று பேசினார். அதற்கு அமைச்சர் ரகுபதி, ‘தலைமையிடம் பேசி தொகுதியை திமுகவுக்கு கிடைக்கச் செய்வோம்..’ என்றார். இதே போல ஒவ்வொரு கூட்டத்திலும் உதயம் சண்முகம் பேசி வந்தார்.
கடந்த வாரம் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய போது, “2011 - 2016 ல் நான் கொண்டு வந்த ரோடுகள் தான் இப்ப மராமத்து நடக்குது. ஆர்டிஓ அலுவலகம் கொண்டு வந்தேன். அவசரத்துக்கு இடமில்லை என்பதால் என் வீட்டில் அலுவலகம் திறந்தோம். அதன் பிறகு இப்ப வரை ஒரு அலுவலகம் கட்ட முடியல பைல்கள் எல்லாம் தண்ணியில கிடக்குது. இப்ப தலைவர் 300 புது பஸ் விட்டார். அதில் ஒரு பஸ் கூட அறந்தாங்கி தொகுதிக்குள்ள வரல. நான் கிராமத்துக்கு 4 பஸ் விட்டேன். இப்ப அதுல ஒன்னு தான் போகுது. இது தான் இந்த எம்எல்ஏ சாதனை. அங்கே, இங்கே தேங்காய் உடைச்சுட்டு போகட்டும். வரும் தேர்தலில் திமுகவில் யாருக்காவது சீட்டு கொடுக்கட்டும்” என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு எதிராக பேசினார்.
இந்த நிலையில் தான் நேற்று பூங்குடி கிராமத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையில் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தார். அடுத்த சில நிமிடங்களில் வேகமாக வந்த திமுக மாஜி உதயம் சண்முகம், ‘எங்களுக்கெல்லாம் சொல்லமாட்டீங்களோ...’ என்று கோபமாக பேசிக்கொண்டே வந்தார். அப்போது அவரிடம் ஒரு தேங்காயும் அதை உடைக்க கத்தியையும் கொடுக்க கோபமாக இருந்தவரை சமாதானம் செய்யும்விதமாக ஒரு முதியவர் பேசும் போது மேலும் கோபமான மாஜி உதயம் சண்முகம், அந்த முதியவரை நோக்கி கத்தியை ஓங்கிவிட்டு பிறகு தேங்காய் உடைத்துவிட்டு அதே வேகத்தோட விழா பந்தலுக்குள் சென்றுள்ளார். ஆனால் அங்கேயும் சமாதான முயற்சி நடந்தது. அங்கும் தன் கோபத்தை வெளிப்படுத்த அவருக்கு தண்ணீரைக் கொடுத்து கோபத்தைத் தணித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து திமுகவினர் கூறும் போது, “திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் ராமச்சந்திரனை தலைமையின் சொல்லைக் கேட்டு ஓட்டு வாங்கிக் கொடுத்து வெற்றி பெற வைத்தது திமுக தான். கொஞ்ச நாளிலேயே அதை மறந்த ராமச்சந்திரன் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கினார். ஒரு நிகழ்ச்சி என்றால் அந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளை அழைக்கக் கூடாது. மீறி அழைத்தால் நான் வரமுடியாது என்று அதிகாரிகளை மிரட்டி வைத்திருக்கிறார். அதனால் அதிகாரிகளும் திமுகவினரை அழைப்பதில்லை. அமைச்சர்கள் நிகழ்ச்சி என்றால் ராமச்சந்திரன் கலந்து கொள்ள மாட்டார். இதையெல்லாம் பார்த்து திமுகவினர் பொங்கிக் கொண்டுள்ளனர். ஆனால் உதயம் சண்முகம் அந்த கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறார் என்றனர். இனியும் கட்சித் தலைமை அமைதி காப்பது நல்லதில்லை. காங்கிரஸ் தலைமையிடம் போசனும்” என்கின்றனர்.