Skip to main content

ஊழல் நிறைந்த தமிழகம் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ஊழல் நிறைந்த தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கிற வரை முதலீடு வருவதற்கோ, தொழில் தொடங்குவதற்கோ, வேலை வாய்ப்பு பெருகுவதற்கோ எந்த வாய்ப்பும் ஏற்படப் போவதில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அ.தி.மு.க. அமர்ந்தது. கடந்த 2015 இல் ரூபாய் 100 கோடி செலவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நடத்தினார். அந்த மாநாட்டில் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழகத்தில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சி ஏற்பட்டு, வேலை வாய்ப்பு பெருகும் என்று உறுதி கூறப்பட்டது. 

 

Tamil Nadu



அதேபோல, 2019 ஜனவரி 25 இல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதன்மூலம் 7 லட்சத்து 66 ஆயிரத்து 49 பேர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ரூபாய் 10 ஆயிரத்து 950 கோடி முதலீட்டில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் 18, 2019 நிலவரப்படி ரூபாய் 5 ஆயிரத்து 455 கோடி முதலீட்டில் 71,169 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி 50 சதவீத இலக்கு தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.


 

கடந்த 2015, 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்தபடி முதலீடுகள் வந்ததா ? தொழில் தொடங்கப்பட்டதா ? வேலை வாய்ப்பு பெருகியதா ? இதுகுறித்து தமிழக அரசு உரிய விளக்கத்தை தர வேண்டும். ஆனால் நடைமுறையில் அறிவிக்கப்பட்ட முதலீட்டில் 50 சதவீதம் கூட செய்யப்படவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் தமிழக அரசு முழு தோல்வியடைந்திருக்கிறது.
 

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியிருக்கிறது என்கிற உண்மையை அ.தி.மு.க.வினரால் மறைக்க முடியாது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 9351 குரூப் - 4 பணியாளர்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கிறது.  ஒரு வேலைக்கு 213 மனுக்கள் வந்திருக்கின்றன. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணிக்காக 4600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். தங்களது தகுதிக்கு குறைவான பணியாக இருந்தாலும் ஊதியக்குழு பரிந்துரையின்படி உறுதியான சம்பளம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இதை விரும்புவதாக கூறுகிறார்கள். இத்தகைய அவலநிலையில் உள்ள தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்றுச் சொல்வதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. 

தமிழகத்தில் நகரங்களில் 58.80 சதவீதமும், கிராமப்புறங்களில் 41.19 சதவீதமும் வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. படித்த தகுதிமிக்க பட்டதாரி இளைஞர்கள் தனியார் உணவகங்களில் இருந்து உணவுகளை டெலிவரி செய்கிற பணியை செய்து வருகிற அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் ஒருநாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் கடுமையாக உழைத்து ரூபாய் 200 முதல் 400 சம்பாதிக்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. 


மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் தற்போது நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் நடத்தப்பட்;ட கணக்கெடுப்பின்படி தேசிய அளவிலும், மாநில அளவிலும் கடுமையான வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி வேலை வாய்ப்பின்மை 2.2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லாத காரணத்தால் வேலையின்மை அதிகரித்து வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சரிகட்டுவதில் தான் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெரும்பாலான நேரம் செலவழிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கிற வரை முதலீடு வருவதற்கோ, தொழில் தொடங்குவதற்கோ, வேலை வாய்ப்பு பெருகுவதற்கோ எந்த வாய்ப்பும் ஏற்படப் போவதில்லை. ஊழல் நிறைந்த தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முடியாத அ.தி.மு.க. அரசு எப்போது ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறதோ, அன்றைக்குத் தான் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணத்தை தொடங்க முடியும். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.