
அண்மையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளது பேசுபொருளாகி இருக்கிறது.
அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, முன்னதாக டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக சொல்லி இருந்த நிலையில் அன்றும் மாலையே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் எடப்பாடி பழனிசாமி அதை மறுத்திருந்தார்.
தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். தற்போது வரை தமிழக பாஜக தலைவர் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்கள் இல்லாததால் அந்த நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்ததால் அதிமுகவில் சர்ச்சை வெடித்தது. அதன் நீட்சியாக ஏற்பட்ட சலசலப்பால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொழுது கூட எடப்பாடியை நேரில் சந்திப்பதை தவிர்த்த செங்கோட்டையன், மாற்றுப் பாதையில் சென்றதும் அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாகியது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.