Skip to main content

ரவீந்திரநாத் சொத்துகள் முடக்கம்?

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

Ravindranath assets frozen?

 

கல்லால் நிறுவன வழக்கில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

கல்லால் குழு அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் சொத்துகள் கல்லால் நிறுவனத்திடம் இருந்ததாகவும் அமலாக்கத்துறை அதை முடக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று கல்லால் நிறுவனத்திடமிருந்து ரூ.8.5 கோடி பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லைகா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி ஜி.கே.எம்.குமரனின் ரூ.15 கோடி மதிப்புள்ள தி.நகர் இல்லத்தையும் வழக்கில் இணைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் - சிவகங்கை காயத்திரி தேவி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

 Sivagangai Gayathri  Devi  Exclusive Interview

 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பரபரப்பை ஏற்படுத்திய காயத்ரி தேவியுடன் ஒரு நேர்காணல்...

 

என்னுடைய பூர்வீகம் காரைக்குடி. திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறேன். எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. ரவீந்திரநாத்தின் மனைவி மற்றும் சகோதரியுடன் எனக்கு நட்பு உண்டு. அதன் மூலம்தான் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ரவீந்திரநாத் எனக்கு அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பார். சமீபத்தில் அவருடைய பேச்சில் மாற்றம் தெரிந்தது. பாலியல் ரீதியாக அவர் பேச ஆரம்பித்ததும், அதை அவருடைய மனைவியிடம் நான் தெரிவித்தேன். அதற்கு முன்பு அவருடைய போனிலிருந்து அழைத்து அவருடைய ஆசையை மற்றவர்கள் என்னிடம் கூறினர்.

 

இதுபோல் இனி கால் வராது என ரவீந்திரநாத்தின் மனைவி மற்றும் ஓபிஎஸ் அண்ணன் ஆகியோர் உறுதியளித்தனர். ஓபிஎஸ் மிகவும் வருத்தப்பட்டார். ஏப்ரல் மாதம் ஒருநாள் இரவு ரவீந்திரநாத் எனக்கு போன் செய்தார். நீண்ட நேரம் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று "உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ" என்றார். "உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இப்படியெல்லாம் பேச வேண்டாம்" என்றேன். நான் சொல்வதை அவர் கேட்கவில்லை. "உன்னை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். இப்போதே வண்டி அனுப்புகிறேன்" என்றார். எனக்கு விருப்பமில்லை என்பதை நான் தெரிவித்தேன்.

 

அதன் பிறகு அவர் ஆபாசமாகப் பேச ஆரம்பித்தார். குடிபோதையில் பேசுபவர் போல் அவருடைய பேச்சு இருந்தது. அடுத்த நாள் எழுந்து பார்த்தால் அவரிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் இருந்தன. என்னிடம் அவர் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார். இவை அனைத்தையும் அவருடைய குடும்பத்தினரிடம் நான் தெரிவித்துவிட்டேன். அவரைத் திருத்தும் இடத்தில் ஓபிஎஸ் இல்லை. ரவீந்திரநாத்தும் திருந்துவதாக இல்லை. தன்னுடைய தவறை அவர் உணரவே இல்லை. அவருடைய நண்பர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்தன. அதன் பிறகுதான் புகார் கொடுக்க நான் முடிவு செய்தேன்.

 

எதற்காக நான் புகார் கொடுத்தேன் என்று ரவீந்திரநாத்தின் மனைவி என்னிடம் கேட்டார். அவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் தான் நான் போலீசில் புகார் கொடுத்தேன். புகார் கொடுத்த பிறகு ரவீந்திரநாத்திடம் இருந்து எனக்கு கால் வந்தது. ஆனால் நான் எடுக்கவில்லை. கோடநாடு வழக்கு குறித்து ஓபிஎஸ் போராட்டம் நடத்தியதற்கும், அதே நாளில் நான் போலீசில் புகார் கொடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதார்த்தமாக நடந்ததுதான் அது. இதற்குப் பின்னால் யாரும் இல்லை. என்னுடைய புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ரவீந்திரநாத்துக்கு நிச்சயம் தண்டனை வழங்க வேண்டும்.
 

காயத்திரி தேவியின் முழுமையான நேர்காணலை வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...

 

 

Next Story

“எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் திமுக” - ஓபிஎஸ் கண்டனம்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

OPS condemns “DMK for destroying livelihood of future generations”.

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை முறையாக நிரப்ப எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான கல்லூரிகளில் பொறுப்பு முதல்வர் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்து இருப்பதைப் பார்க்கும்போது, நிரந்தரமாக கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க இந்த அரசு முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

 

மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் அரசுக் கல்லூரிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும்போது, நிரந்தர ஆசிரியர்களின் ஊதியத்தை அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, பயிற்றுவிக்கும் ஆர்வமும் குறையும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் படிப்பும் பாதிக்கக்கூடும். பொதுவாகவே, பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது என்பது உயர் கல்வியைப் பாதிக்கும் செயலாகும். மேலும், முனைவர் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களை எல்லாம் வெறும் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிப்பது என்பது ஆசிரியர் தொழிலையே அவமதிப்பதற்கும் சமம். ஒருவேளை, தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளையாவது அரசு வகுக்க வேண்டும்.

 

அப்பொழுதுதான், கவுரவ விரிவுரையாளர்களும் ஆர்வமாக பணியாற்றுவார்கள். இல்லையெனில், அவர்களுடைய ஆர்வம் குறைவதோடு, தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் நிரந்தரப் பணி கிடைக்குமேயானால், அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும்.

 

எனவே, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான உயர் கல்வியைப் பெற்று அதன்மூலம் வேலைவாய்ப்பினை அடையும் வகையில், அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் முறையினை கைவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.