தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களைக் கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாகச் செயல்படுவது, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக தமிழ்நாடு அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு 19 பக்க கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் 'அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர் அந்தப் பதவியில் தொடரவே கூடாது. ஆளுநர் ரவி தனது நடத்தை செயல்பாடுகள் மூலம் தான் ஒருதலைபட்சமானவர், ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். ஆளுநர் ரவி உயர்பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என்பது அவரது செயல்பாடுகளால் நிரூபணம் ஆகியுள்ளது. அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போது தான் தொடங்கியுள்ள நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்ய அவசரக் கதியில் செயல்படுகிறார் ஆளுநர்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்து வருகிறார். இப்படி ஆர்.என்.ரவி தனது செயல்பாடுகள் மூலம் ஆளுநர் பதவியை சிறுமைப்படுத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது வெறுப்பு, அவமதிப்பை தூண்டுகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது பிரிவினை பேச்சுகள் மூலம் ஆளுநர் காட்டி வருகிறார். விரும்பத்தகாத பிளவுபடுத்தும் மதரீதியான கருத்துக்களையும் பொதுவெளியில் பரப்புவது அவருடைய ஆளுநர் பதவிக்கு பொருத்தமற்றது.
சனாதனத்தை புகழ்வது, திருக்குறளை வகுப்பு வாதப்படுத்துவது என தமிழ் மக்களின் உணர்வையும் பெருமையையும் ஆளுநர் புண்படுத்தியுள்ளார். இந்தியா ஒற்றை மதத்தைச் சார்ந்தது என்று ஆளுநர் பேசியது அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல். சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் குற்றவாளிகளை ஆதரிக்கும் போக்குடன் ஆளுநர் ரவி செயல்பட்டார். சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமணம் குறித்து அவர் பேசியது காவல்துறை விசாரணைக்கு இடையூறாக இருந்தது. சிதம்பரத்தில் குழந்தை திருமணமே நடக்கவில்லை என்று ஆளுநர் கூறிய நிலையில் திருமணம் நடந்த வீடியோ வெளியாகி ஆளுநரின் கருத்தை பொய் என நிரூபித்தது. திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என்.ரவி கூறி இருப்பது அவதூறானது மட்டுமல்ல அறியாமையில் கூறப்பட்டுள்ளதும் ஆகும்.
50 ஆண்டுகளுக்கு மேலான திராவிட அரசு அரசியல் விளைவாகவே இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மூன்று இடங்களில் உள்ளது. வளர்ச்சியும், சமூக நீதியும் கைகோர்த்துச் செல்லும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு வெளியிட்டுள்ள சமூக முன்னேற்ற குறியீட்டில் 63.33 புள்ளிகளை தமிழ்நாடு பெற்றுள்ளது. தேசிய சராசரியான 60.19 விட தமிழ்நாட்டின் முன்னேற்றம் அதிகமாகும். தொடர்ந்து திராவிட ஆட்சி நடப்பதால் தான் பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 38,837 தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 28,479 தொழிற்சாலைகளுடன் குஜராத் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ரூபாய் 44.04 கோடி அளவுக்கு மின்னுனு சாதனங்களை ஏற்றுமதி செய்து நாட்டின் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டின் திராவிட அரசியல் புறம்போக்குத்தனமானது என்று சொல்பவர்களின் பார்வையில் தான் குறைபாடு உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகளை கவிழ்க்கும் வாய்ப்புகளை ஆளுநர்கள் தேடுகின்றனர். மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பை தேடும் ஆளுநரை வெறும் ஒன்றிய அரசின் முகவராகத்தான் கருத முடியும். ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவத்தையே அழித்துவிடும். ஆளுநர் பதவியேற்கும் போது எடுத்த உறுதிமொழி மீறி செயல்படுவதாக தெரிகிறது. வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கும் ஆளுநர் ரவி அச்சுறுத்தலாக உள்ளார்.
ஆளுநர் பதவியில் ரவி நீடிப்பது பொருத்தமானதா என்பதை குடியரசு தலைவரின் முடிவுக்கே விடுகிறேன். தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது வேருன்றிய பகைமையை கொண்டவராக ஆளுநர் உள்ளார். தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற செய்ய வேண்டும் என்ற அதிர்ச்சி கருத்தை தெரிவித்தவர் ஆளுநர். தமிழ்நாடு அரசும் சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். நாகலாந்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாகவே ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டார். நாகலாந்து ஆளுநர் பதவியில் இருந்து ரவி நீக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தில் நிம்மதி ஏற்பட்டதாக என்டிபி கட்சித் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரை நிகழ்த்திய போது ரவியின் சர்வாதிகாரம் உச்சகட்டத்தை எட்டியது. அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட கண்ணியமான ஆளுநராக செயல்படுவதை விட மலிவான அரசியல் ஆர்வம் கொண்டவராக ஆளுநர் உள்ளார்' என தெரிவித்துள்ளார்.