Skip to main content

“துரோகியும் அவர் தலைமையிலான சர்வாதிகாரக் கூட்டமும்” - இபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

OPS reports that Palaniswami lost the by-election in Erode

 

ஈரோடு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றதன் காரணம் துரோகியும் துரோகியின் தலைமையிலான கூட்டணியும் தான் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்க்கட்சிகளின் வலுவின்மையில்தான் இருக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. நேற்றைய ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு இதைத்தான் உணர்த்தியுள்ளது.

 

பல காரணங்களால் பொதுமக்கள் தி.மு.க. அரசின் மீது மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்ற நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாய்ப்பினை பெறாமல், வரலாறு காணாத படுதோல்வியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் கழகத்திற்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கைத் துரோகங்கள்தான். இவற்றைப் பார்க்கும்போது, "பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை, பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான்" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது.

 

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தற்போது கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஓர் இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத் தேர்தல் தான். இதற்குக் காரணம் துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான்.

 

'இரட்டை இலை' சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்ற அறிவுரையை நாம் ஏற்றுக்கொண்ட நிலையில், உச்சநீதிமன்ற அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து தன்னிச்சையாக ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்து அந்த வேட்பாளரின் பெயரை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியபோது அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிகமான வாய்ப்புகள் இருந்தும், 'இரட்டை இலை' சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால், அதற்கு முழு முதற் காரணம் எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.

 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. நீதியும், நேர்மையும் தவறாமல் நடுநிலையோடு சிந்தித்து தர்மத்தின் பக்கம் நிற்கும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள் களத்தில் இறங்கி தங்கள் நியாயத்தை உணர்த்த வேண்டிய தருணம் இது. எப்போதும் இல்லாத வகையில் தொடர் தோல்விகளால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிற தொண்டர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, நடுநிலைமையோடு எல்லோரையும் அரவணைத்து கழகத்தை மூத்தத் தலைவர்கள் முன்னின்று நடத்துவதுதான் எம்.ஜி.ஆர்.க்கும், ஜெயலலிதாவிற்கும் நாம் செய்கிற நன்றிக் கடன் ஆகும்.

 

கழகத் தொண்டர்களின் ஆதரவோடு பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று ஜனநாயக வழியில் கட்சியின் அடிப்படை சட்ட திட்ட விதிகளைக் காப்பாற்றி அனைவரையும் ஒருங்கிணைத்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் கட்சியை வழி நடத்திச் செல்லவும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் கழகம் வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்