இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என மோடி கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வரும் மே 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெற சில தினங்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தொடர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதன்படி, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ‘கர்நாடக மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறைந்து வருகிறது. அதேசமயம், பெண்களுக்கு முன்னுரிமை தரும் விதமாகவே பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அதனால்தான் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிர்மலா சீத்தாராமனை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கையா நாயுடுவை துணை குடியரசுத் தலைவராகவும் ஆக்கியிருக்கிறோம்’ என பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீத்தாராமனை, ஓட்டுக்காக கர்நாடகாவைச் சேர்ந்தவர் என மோடி கூறியிருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். கன்னட அமைப்புகள் இதை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நெட்டிசன்களும் இதை சாதாரணமாக விட்டுவைக்கவில்லை.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர். அவரது சொந்த ஊர் திருச்சி. அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரகலா பிரபாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.