Skip to main content

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Mayiladuthurai Congress candidate announcement!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை நேற்று (25.03.2024) காங்கிரஸ் வெளியிட்டிருந்தது. அதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார். 

சார்ந்த செய்திகள்