Skip to main content

“தனக்குப் பின் ஓபிஎஸ் தான் என ஜெயலலிதாவே சொல்லியுள்ளார்” - மருது அழகுராஜ்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

"Jayalalitha herself has said that OPS is after her" Marudu Aguraj

 

அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இரண்டு தரப்பும் அதிமுக தங்கள் கட்சி என உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதில் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சிப் பொதுக் கூட்டங்கள் கூட்டுவது, அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்வது என தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு அமைதியாகவே இருந்து வந்தது.

 

இந்நிலையில், இன்று (டிச.21) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமை ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக நேற்று ஓபிஎஸ் அதிமுக கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

இந்நிலையில், இன்று காலை துவங்கிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஓபிஎஸ் வந்தபோது அங்கு அவரின் ஆதரவாளர்கள் நாங்களும் உள்ளே வருவோம் என்று நிர்வாகிகளுடன் வாதிட்டனர். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

 

அதன் பின் துவங்கிய கூட்டத்திற்கு அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் பேசிய கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், "இயக்கத்தில் ஒளிய வந்த திருடன் இயக்கத்தை அபகரிக்க பார்க்கிறான். நாற்காலிக்கு பித்துப்பிடித்து அலைபவர்கள் மத்தியில் நாற்காலியை வழங்கியவர்களிடமே உரிய நேரத்தில் ஒப்படைத்த உத்தமர் ஓ.பி.எஸ்.

 

விமானத்தை இயக்கி அதை இறக்கத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி வானத்தில் சுற்றிக்கொண்டு உள்ளார். ஜெயலலிதா தனக்குப் பின்னால் தான் சுமந்த தலைப்பாகையை ஓபிஎஸ்ஸிடம் கொடுத்தார். ஓபிஎஸ் தான் அடுத்த அதிமுக தலைவர் என ஜெயலலிதா இரண்டு முறை முதல்வராக்கி அடையாளம் காட்டினார். நாம் தான் தவறிழைத்துவிட்டோம்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்