தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தொடர்ந்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முதன்மை நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து கட்சி பணிகள் குறித்து கேட்டு வருகிறார். முன்னதாக மாநாடு முடிந்த கையோடு செயற்குழு கூட்டம் நடந்த நிலையில் அதில் பொதுச்செயலாளர் அனந்துக்கு ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்து மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆய்வறிக்கை சமர்பிக்குமாறு விஜய் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து பணிகள் நடந்து வந்தது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் கட்சியில் 100 முதல் 110 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. த.வெ.க. கட்சி ஆரம்பிக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதத்துடன் அறிவித்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில் அதற்குள் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கும் பணியை முடிக்க வேண்டும் என ஆனந்துக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டது. மேலும் மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் த.வெ.க. வில் தேர்தல் நடத்தில் நியமிக்கப்படும் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அதில், “கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். போட்டியிடுவோர் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஏற்கப்படாது விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பப்படிவத்துடன் உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை , ஆதார் அட்டை நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
கட்சியின் மாவட்டம், போட்டியிடும் பதவியை தெளிவாக குறிப்பிட வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. கட்சியின் விதிப்படி தேர்தல் குழுவின் முடிவே இறுதியானது. தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தலைமை கழகத்தால் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகளுக்கான விண்ணப்பத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.