சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையே இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக, காங்கிரஸ், பா.ம.க வி.சி.க, சி.பி.ஐ, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் அப்பாவுவிடம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் (08.01.2025) விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (10.01.2025) பேசுகையில், “நாங்கள் கேள்வி எழுப்பினால் நாள்தோறும் ஒரு அமைச்சர் எனக்கு எதிராக அறிக்கை விடுகிறார்கள். கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திமுக மலிவான அரசியலைச் செய்கிறது. யார் இந்த சார் எனக் கேள்வி கேட்டால் ஏன் பதறுகிறீர்கள்?. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் ஏன் இந்த பதற்றம்?. எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், “நீங்கள் கொடுக்கும் அறிக்கைக்குத் தான் அமைச்சர்கள் பதில் கூறுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டனை பெற்றுத் தரப்படும். நீங்கள் இதைப்பற்றியே பேசினால் நாங்கள் பொள்ளாச்சி சம்பவத்தைப் பற்றிப் பேச வேண்டிவரும்” என ஆவேசமாகப் பேசினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது குற்றவாளி ‘சார்’ என்று ஒருவருடன் பேசியதாக எப்.ஐ.ஆர்.இல் உள்ளதாகச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியினர் அவரை கைது செய்ய வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.