சென்னை தி.நகரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
விஷ்ணு பிரசாத் எங்கள் மீது சமீபத்தில் விமர்சனம் செய்தார். அவருடைய விமர்சனத்தால் எங்கள் கட்சிக்கோ, எங்களுடைய கூட்டணிக்கோ எந்த ஒரு எள்ளவும் பாதிப்பு வரப்போவது கிடையாது. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மனஉளைச்சல், மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
விஷ்ணு பிரசாத்தை 32 ஆண்டுகளாக எனக்கு தெரியும். என்னுடன் கல்லூரியில் படித்தவர். 28 ஆண்டுகளாக என்னுடைய மைத்துனராக இருக்கிறார். என்னுடைய மூன்று மகள்களை அவருடைய மடியில்தான் உட்கார வைத்து முடி எடுத்தோம். காதணி விழா நடத்தினோம். இப்படி அவர் விமர்சனம் செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இது எனக்கு மட்டுமல்ல, எனது மனைவிக்கும் மிகபெரிய மனவருத்தம் இருக்கிறது.
இதற்கு என்ன காரணம். பொதுவாக திமுக கலைஞர் இருந்த காலத்தில் எங்களை எதிர்க்க வேண்டும், விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை வைத்துதான் அறிக்கை விடுவார்கள். இது எல்லோருக்கம் தெரியும். ஆனால் இப்போது திமுக தலைவர் ஒரு படி மேலே சென்று எங்கள் உறவினர்களை வைத்து எங்கள் மீது அவதுறுகளை, விமர்சனங்களை செய்ய வைத்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.
ஆனாலும் நாங்கள் அவரைப் பற்றி எந்த விமர்சனமும் வைக்கப்போவது கிடையாது. பொதுவாக திருமாவளவன் எங்களை விமர்சித்தால்தான் அவருக்கு அரசியல். எங்களை கடுமையாக எதிர்த்தால்தான் அவருக்கு சீட்டு. ஒருவேளை விஷ்ணு பிரசாத்தும் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். எங்களை விமர்சனம் செய்தால் அவருக்கு ஒரு சீட்டு கிடைக்கலாம். ஆனால் ஒரு சீட்டுக்காக 30 ஆண்டுகால உறவு, பந்த பாசத்தை விட்டுக்கொடுப்பார் என்று கனவில்கூட நினைக்கவில்லை. இவ்வாறு கூறினார்.
அன்புமணி ராமதாஸின் மைத்துனர் விஷ்ணுபிரசாத். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக அண்மையில் ராகுல்காந்தியால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.