Skip to main content

உள்ளாட்சியில் எப்படி ஜெயித்தோம்...? - டெண்டர் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதிமுக முன்னாள் ஒ.செ!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

Krishnakumar
                                                            கிருஷ்ணகுமார்


குமரி மாவட்டம், அ.தி.மு.க. தோவாளை ஒன்றியச் செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகுமார். அந்தப் பதவியை இரண்டு வாரங்களுக்குமுன் ராஜினாமா செய்தார். மேலும் தற்போது கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவராக உள்ளார். இவர், கடந்த 31 ஆண்டுகளாக, அ.தி.மு.க.வில் இருந்துவருவதுடன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருக்கும் தளவாய் சுந்தரத்தின் உதவியாளராகவும் இருந்துவந்தார். தளவாய் சுந்தரம் மா.செ, மேல்சபை எம்.பி, தமிழக அமைச்சர் எனக் கோலோச்சிக் கொண்டிருந்தபோதெல்லாம் அவரின் உதவியாளராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்துவந்தவர்தான் கிருஷ்ணகுமார். கடந்த ஒரு மாதமாக தளவாய் சுந்தரத்துக்கும் கிருஷ்ணகுமாருக்கும் நெருங்கிய நட்பு இல்லையென்று அ.தி.மு.க.வினர் கூறிவந்தனர்.

 

இந்தநிலையில், கிருஷ்ணகுமார், தான் பேசி ஒரு ஆடியோவை வெளியிட்டு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பையும், தளவாய் சுந்தரத்துக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறார். ஏழரை நிமிடம் ஓடும் அந்த ஆடியோவில், “தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சாந்தினியை எப்படியெல்லாம் முறைகேடு செய்து ஜெயிக்க வைத்தோம் என்பது எனக்கும் அந்த கடவுளுக்கும்தான் தெரியும். இது இரண்டு மாதம் கழித்துத்தான் தளவாய் சுந்தரத்துக்கே தெரியப்படுத்தினேன். சாந்தினி ஊராட்சி ஒன்றியத் தலைவரானதும் பொது நிதியில் டெண்டர் நடந்தது. அப்போது ஒப்பந்தக்காரர்களிடம் பேமன்ட் வசூல் செய்து என் கையில் தராமல் அப்படியே தலைவர் கையில்தான் கொடுத்தார்கள்.

 

அப்படி 5 டெண்டர் நடந்தது. எல்லாப் பணத்தையும் தலைவர்தான் வாங்கினார். இதில் ஒருமுறைதான் கவுன்சிலர்களுக்குப் பிரித்துப் பங்குகொடுத்தார். மாதவலாயம் - தோவாளை ரோடு ரூ.3 கோடி, செண்பகராமன்புதூா் ரூ.1.50 கோடி, பூதப்பாண்டி கோர்ட் ரூ.4 கோடி, செண்பகராமன்புதூர் மார்க்கெட் ரூ.10 கோடி, ஈசாந்திமங்கலம், அனந்த பத்மநாபபுரம் தலா ரூ.60 லட்சம் என டெண்டர் விட்டு அதன்மூலம் கிடைத்த பணத்தை தலைவர் என்ன செய்தார்? இதை ஒன்றிய கவுன்சிலர்கள்தான் கேட்க வேண்டும். இந்தப் பணத்தை நான் வாங்கினேன் எனக் கூறுவார்; நீங்கள் நம்புவீர்கள் அதேபோல் தளவாய் சுந்தரமும் நம்புவார். அப்படி என்னிடம் ஒப்பந்ததாரர்கள் தந்தார்கள் என்று அவர்கள் கூறினால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

 

இந்த தலைவர், கட்சி நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடித்து ஒட்டுவது கிடையாது, விளம்பரம் செய்வது கிடையாது, நிகழ்ச்சிக்கு ஆர்கனைஸ் செய்வது கிடையாது. அவர்களுக்குத் தேவை பணம், பணம் தான். இது எல்லாம் என்னைத் தவறாக நினைக்கும் தளவாய் சுந்தரத்துக்கும் கட்சிக்காரர்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் இதை வெளியிட்டுள்ளேன்” எனப் பேசியுள்ளார் கிருஷ்ணகுமார்.

 

இந்த நிலையில், அப்போது தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி தேர்தலில், முதலில் தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்து ஆளும் கட்சியின் அதிகாரத்துடன் அதிகாரிகளின் உடந்தையுடன் முறைகேடு செய்து அ.தி.மு.க. சாந்தினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அப்போதே முறைகேடு நடந்ததாகப் புகார்கள் கூறியும் தேர்தல் அதிகாரிகள் அதை மறுத்தனர். இப்போது கிருஷ்ணகுமாரின் ஆடியோ அதை உறுதிப் படுத்தியுள்ளது.

 

இது சம்மந்தமாக கிருஷ்ணகுமாரிடம் நாம் கேட்டபோது, “நான் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டர் விஷயத்தில் தலையிடுவதாக, என் மீது தலைவர் மற்றும் துணைத்தலைவர் தவறான கருத்துகளைக் கட்சியினரிடத்தில் பரப்பி வருகிறார்கள். இதன் உண்மைத் தன்மைகளை என்னுடைய ஒன்றியத்திற்குட்பட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் தெரியப்படுத்தவேண்டும். அதுதான் ஆரோக்கியமான விஷயம். நான் எந்தத் தவறுகளிலும், குற்றச்சாட்டுகளிலும் ஈடுபடவில்லை. அதை தெளிவுபடுத்துவதற்காகத்தான் ஒன்றிய கழகத்தின் வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டேன்” என்றார்.

 

cnc

 

ஊராட்சி ஒன்றியத் தலைவி சாந்தினியிடம் பேசிய போது, “நானும் துணைத் தலைவரும் கிருஷ்ணகுமார் என்ற தனிநபரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டோம். எதிர்க் கட்சியினர் முகவர்கள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் முறைப்படி நியாயமான முறையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

 

வெற்றி பெற்ற நாங்கள், உள்ளாட்சித்துறை மற்றும் வேறு எந்தத் துறை சம்மந்தமான டெண்டரிலும் தலையீடு செய்யவில்லை. கிருஷ்ணகுமார், உடல்நிலை சரியில்லாமல் ஒ.செ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இப்போது தவறுதலாக எங்கள் மீது குற்றம் சுமத்திவருகிறார். அவர் மீண்டும் இப்படியே நடந்தால் கட்சித் தலைமையிடம் புகார் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்