2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 'யார் அந்த சார்'? என்ற பேஜ் அணிந்து கொண்டு வருகை புரிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் சமூக வலைத்தளம் வாயிலாக மருது அழகராஜ் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அதில் 'கோடநாடு சிசிடிவியை ஆஃப் பண்ணச் சொன்ன அந்த சார் யாருங்குறதையும் கேளுங்கப்பா?' என தெரிவித்துள்ளார்.
மருது அழகுராஜ் அதிமுக செய்தி தொடர்பாளராகவும், நமது எம்ஜிஆர் மற்றும் நமது அம்மா இதழ்களின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தவர். ஓபிஎஸ்- எடப்பாடி இடையே ஏற்பட்ட மோதலில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மருது அழகுராஜ் தற்பொழுது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.